புதுக்கடை, மார்- 3
புதுக்கடை இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் நேற்று (01.03.2025) மாலை புத்தன்துறை புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி அகாலமரணம் அடைந்த ஜஸ்டஸ், மைக்கேல் பின்றோ, அருள் சோபன், மரிய விஜயன் ஆகியோரின் உடல்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஸ்குமார் முன்னிலையில் இன்று (02.03.2025) மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறுகையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டதோடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டார்கள்.
அதனடிப்படையில் நிவாரண உதவித்தொகை பாதிக்கப்பட்ட நான்கு குடும்பத்திற்கும் தனித்தனியே தலா ரூ.5 இலட்சத்திற்கான காசோலை என மொத்தம் ரூ.20 இலட்சத்திற்கான நிவாரண உதவித்தொகை வழங்கி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பத்மநாபபுரம்சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் சின்னகுப்பன், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர், பங்குதந்தையர்கள், துறை அலுவலர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள், பொதுமக்ககள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.