ராமநாதபுரம், ஜூன் 16 –
மண்டபம் மீன்பிடி விசைப்படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியதில் உயிரிழந்த மீனவர் இருவரின் உடலை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டனர்.
தமிழக கடலில் விசைப்படகுகளின் நடப்பாண்டு மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14 இரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சேது நகர் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மீன்பிடி அனுமதி சீட்டு பெறாமல் ஜூன் 14 மாலை மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்றது. 5 நாட்டிக்கல் மைல் தூரம் சென்ற படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இப்படகில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய பிரசாத், மண்டபம் பகுதியைச் சேர்ந்த முஹமது ஹனிபா ஆகியோர் மற்றொரு படகு மூலம் கரை சேர்ந்தனர். மாயமான எஞ்சிய 3 மீனவர்கள் பாம்பன் பகுதியைச் சேர்ந்த பரக்கத்துல்லா, கலீல் முஹமது, ஆரோக்கிய ம் ஆகியோரை இந்திய கடலோரக் காவல் படையினர், மரைன் போலீசார் மற்றும் சக மீனவர்கள் தீவிரமாக தேடி வந்தனர். இவர்களில் கடல் நீரில் மூழ்கி இறந்த ஆரோக்யம், பரக்கத்துல்லா உடல்களை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டனர். மற்றொரு மீனவர் பாம்பன் பகுதியைச் சேர்ந்த கலீல் ரஹ்மானை தேடி வருகின்றனர்.