தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பானு சுஜாதா மேற்பார்வையில் தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு உணவு பகுப் பாய்வு வாகனம் மூலம் உணவு பாதுகாப்பு மற்றும் கலப்படம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன், அருண்குமார், உதவி உணவு பகுப்பாய்வாளர் கார்த்திக் ஆகியோர் பொதுமக்களிடம் உணவு பாதுகாப்பு மற்றும் உணவில் கலப்படம் கண்டறிவது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் தங்களது சந்தேகங்களை கேட்டு அறிந்தனர். மேலும் பேருந்து நிலையத்தில் டீக்கடைகளில் உணவு, பால் போன்றவற்றின் மாதிரியை உடனடியாக பகுபாய்வு செய்து அதன் தரத்தை கண்டறிந்தனர். புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டல்கள், டீக்கடைகள், பெட்டி கடைகள் ஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 10 கடைகளில் முகவரி இல்லாத கூல்ட்ரிங்ஸ், பிரட், முறுக்கு, சிப்ஸ், கடலை, எள்ளுருண்டை பொருட்கள் விற்றதற்கும், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதைய டுத்து 10 கடைகளின் உரிமையாளர்களுக்கும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் 20 கிலோ காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.



