அரியலூர், ஜன;08
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட தலைநகர் அண்ணாசிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் 36 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அனைத்து நிலைப் பணியிடங்களையும் உடனே நிரப்பிட வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், விடுப்பட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும். கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். வளர்ச்சித் துறை ஊழியர் மீது திணிக்கப்படும் பிறதுறை பணிகளை முற்றாக கைவிட வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்கு நிரந்தர ஊழியர் கட்டமைப்பு வசதிகளை மாநில, மாவட்ட, வட்டார அளவில் ஏற்படுத்திட வேண்டும். சத்துணவு மையங்களில் காலிப் பணிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் அண்ணாசிலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் முழக்கமிட்டவாறு சிறிது தூரம் நடந்துச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட 36 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூத், மாவட்டச் செயலாளர் சண்முகம், இணையச் செயலாளர் பழனிவேல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்