இராமநாதபுரம் ஜுலை 02-
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சிறுமணியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை, தனது கைம்பெண் மகளுக்கு அரசு வழங்கும் ஆதரவற்ற விதவை பெண் உதவிதொகை பெற விண்ணப்பிதிருந்தார். இது சம்பந்தமாக நல்லூர் குரூப் வி.ஏ.ஓ. பூமிசந்திரனை (வயது47) நேரில் சந்தித்து விபரம் கேட்ட போது தனக்கும் தனக்கு மேல் உள்ள அதிகாரிகளை கவனிக்க வேண்டும் எனக்கூறி ரூ.6000/- கேட்டுள்ளார். மனுதாரர் தன்னால் அவ்வளவு முடியாது என மறுக்க மேற்படி கிராம நிர்வாக அலுவலர் ரூ.5000/-மாவது கொடுத்தால் தான் வேலை நடக்கும் என கறாராக கூறியுள்ளார். இன்னிலையில் மனம் வருந்திய மனுதாரர் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாமல் இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை நாடியுள்ளார். பின்னர் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டமான BNSS பிரிவு-173 ன்படிவழக்கு பதிவு செய்து பின்னர் இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மனு தாரரிடம் கொடுத்து மேற்படி வி.ஏ.ஓ அலுவலகம் அமைந்துள்ள முதுகுளத்தூர் பகுதியில் மாறு வேடத்தில் ஆங்காங்கே மறைந்து கண்காணித்து வந்தனர். அப்போது லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டதை உறுதி செய்த அதிகாரிகள் மேற்படி வி.ஏ.ஓ.வை கையும் களவுமாக பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதத்தில் லஞ்சம் பெற்ற பெண் வி.ஏ.ஓ உட்பட மூன்று வி.ஏ.ஓ.கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது போன்று லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள் மீது பொது மக்கள் தைரியமாக புகார் தெரிவிக்க லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் புகார் மற்றும் தகவல் தெரிவிப்பவர்களின் ஊர், பெயர் இரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.