நாகர்கோவில் அக் 17
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் அரசு பள்ளிகளுக்கு இணையாக அரசு உதவி பெறும் பள்ளிகளும் பெரும் பங்காற்றியுள்ளன. அவற்றுள் மொழி வழிச் சிறுபான்மை, மத வழிச் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளும் அடங்கும். அரசு பள்ளிகளுக்கு முன்பாகவே அடித்தட்டு மக்களுக்குக் கல்வியைக் கொண்டு சேர்த்த பெருமை உதவி பெறும் பள்ளிகளையையேச் சாரும். கடந்த காலங்களில் தமிழக அரசும் இக்கல்வி நிலையங்களை முழுமையாக ஆதரித்தே வந்துள்ளன.
தற்போதைய நிலையில் தமிழ் நாட்டில் செயல்பாட்டிலுள்ள நிதியுதவி பெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 8403. இப்பள்ளிகளில் சுமார் 28.5 இலட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை என்பது தமிழ்நாட்டில் இலவச கல்வி பெறுகின்ற மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதிக்கும்(34.2%) மேலாகும். இம்மானவர்களுக்கு சுமார் 80,000 ஆசிரியர்கள் பயிற்றுவித்து வருகின்றனர். இதில் மாநிலம் முழுவதுமாக சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப் பணியிடங்களும் அடங்கும்.
அரசு பள்ளி மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் சமூக பொருளாதாரப் பின்னணியில் சமநிலையிலேயே உள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசு பள்ளிகளே இல்லாத இடங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமே சாதாரண மக்களுக்கான இலவசக் கல்வியை அளிக்கும் நிலையில் உள்ளன. எனவே தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வந்த அனைத்து நலத் திட்டங்களும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் சேர்த்தே நடைமுறைப்படுத்தப் பட்டன.
குறிப்பாக காமராசர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இலவச மத்திய உணவுத் திட்டம், அதனைத் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் நடைமுறைப்படுத்தப் பட்ட சத்துணவுத் திட்டம், இலவசப் பாடநூல்கள், சீருடைகள், மிதிவண்டி, மடிக்கணினி வழங்கும் திட்டங்கள் என அனைத்தும் அரசு பள்ளி மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் சேர்த்தே நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன.
ஆனால் அரசின் அண்மைக் கால நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டதன் விளைவாக, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பாரபட்சமான முறையில் நடத்தப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் இலவசக் கல்வி பெறுகின்ற நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் முற்றிலும் மறுக்கப்பட்டு வருகிறது.
அரசின் இந்நிலைபாட்டை எதிர்த்து சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளின் உரிமை மீட்பு குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு திருச்சி புனித வளனார் கல்லூரியில் வைத்து 5000 – க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற உரிமை மீட்பு மாநாடு ஒன்றும் நடைபெற்றது.
இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும்,
மேலும் பல்வேறு அமைப்புகளின் தொடர் முயற்சி காரணமாகவும் கிராமப்புற மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், தமிழ் வழியில் பயிலும் மாணவ மாணவியருக்கு தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், கலைத் திருவிழாக்களில் பங்கேற்கும் வாய்ப்பு ஆகியன மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளன. அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளை எமது அமைப்பு மனதார வரவேற்கிறது. நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
எமது பள்ளிகள் சார்பான இதர கோரிக்கைகள் பழைய நிலையிலேயே தொடர்வதால்
18.09.2024 அன்று மதுரை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் வைத்து மீண்டும் கூடிய சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமை மீட்புக் குழுக் கூட்டத்தில் கீழ்காண் கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி அக்கையெழுத்துப் பிரதிகளை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலை வர்களிடம் ஒப்படைத்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் கோரிக்கைகள்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வியில் வழங்கப்படுகின்ற 7.5% இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்திட வேண்டும்.
மாணவர் நலன் கருதி உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு பதிவிலுள்ள ஆங்கில வழி இணை பிரிவு மாணவர்களையும் கணக்கில் எடுத்து பணியிட நிர்ணயம் செய்வதோடு, கற்றல் கற்பித்தல் இடையூறின்றி நடைபெற ஆசிரியர்களை ஊக்கப்படுத்தவும்.
1991-1992 கல்வியாண்டிற்குப் பின்னர் தொடங்கப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட தமிழ் வழிப் பள்ளிகளுக்கு மானியம் அளித்து கலைஞர் பிறப்பித்த ஆணையினைச் செயல்படுத்திடவும்
காலங்காலமாகச் செயல்பட்டு வருகின்ற நிதி உதவி பெறும் பள்ளிகளின் தொடர் அங்கீகாரம் புதுப்பித்தல் பணியினை எளிமைப்படுத்தி, நிரந்தர அங்கீகாரம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு தனியார் பள்ளி ஒழுங்காற்றுச் சட்டம் – 2018, விதிகள் 2023 -ல் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு முரணான பிரிவுகளை நீக்கம் செய்திடுட வேண்டும். போன்ற
கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்றிடக் கேட்டு முதல் கட்டமாக மாநிலந்தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.