ஏ ஜே எம் பவுண்டேசன் நிறுவனர் ஜெகநாதன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார் அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சிறிது தொலைவில் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை பகுதியாக முட்டம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த முட்டம் கடற்கரை பகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சுற்றுலாத்தளமாக இருந்து வருகிறது. இங்குள்ள கடல் அழகை ரசிக்க தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த பகுதியில் வழிபாட்டு தலங்களும், நூற்றுக்கணக்கான மக்கள் பணிபுரியும் தொழில் நிறுவனங்களும், மக்கள் வசிக்கும் குடியிருப்புகளும் உள்ளன. இவ்வளவு சிறப்புமிக்க இந்த முட்டம் பகுதியில் அமைந்துள்ள ஜேம்ஸ்நகர் என்ற இடத்தில் கடல் பரப்பை ஒட்டியுள்ள பகுதியில் தினந்தோறும் குப்பைகள் பஞ்சாயத்து ஊழியர்களால் கொட்டப்பட்டு குப்பைக்கிடங்கு போல காட்சியளிக்கிறது. இதில் எண்ணற்ற அளவில் மக்காத குப்பையாகிய பிளாஸ்டிக் (நெகிழி) குப்பைகளும் அடங்கி உள்ளன. தற்போது இந்த நெகிழி குப்பைகள் டன் கணக்கில் சேகரிக்கப்பட்டு மலை போல் குவிந்துள்ளன. இந்த நெகிழி குப்பைகளை சரியான வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் அவ்வப்போது எரித்து வந்துள்ளனர். மேலும் நெகிழி குப்பைகள் கடல் அலை அரிப்பில் கடலுக்குள் சென்று கடல் பகுதியை மாசடையச் செய்கிறது. இதனால் மீன்கள் உட்பட கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. எரிக்கப்படும் நெகிழிகள் காற்றை மாசுப்படுத்தி அருகிலுள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் சென்று பொதுமக்களுக்கு
சுவாச நோய்களுக்கு காரணமாக அமைகிறது. எரிந்த நிலையில் காற்றில் பறக்கும் நெகிழி குப்பைகளால் அருகிலுள்ளவர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
நெகிழி குப்பைகளை ஒழிக்க அரசு கொள்கை வகுத்து செயல்படுத்திவரும் இவ்வேளையில் பஞ்சாயத்து ஊழியர்கள் கவனக்குறைவாக பொதுமக்கள் மற்றும் கடல் பகுதிக்கு பாதிப்புகள் ஏற்படும் வகையில் பணிபுரிந்து வருவது மிகவும் வருந்த தக்க நிகழ்வாக உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் நெகிழி குப்பைகளை கையாளும் ஊழியர்களுக்கு, நெகிழியை கையாள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கடல் பரப்பில் சேகரிக்கும் குப்பைகளை உடனே அப்புறப்படுத்தி சுற்றுச்சூழலை காக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.