தேனி மாவட்டம்
பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தேனி மாவட்டம், பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் ஆதார் திருத்தம் செய்வதற்காக நடைபெறும் சிறப்பு முகாமினை தேனி-அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.06.2024) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தமிழ்நாடு அரசின் சார்பில், மாணவர்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டங்கள் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக அனுப்புவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவ, மாணவிகளின் நலனுக்காக பல்வேறு புதுமையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களுக்கும் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றன.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உதவித்தொகை, ஊக்கத்தொகை போன்ற நலத்திட்டங்களை பெற ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியமாகிறது.
இந்த நலத்திட்டங்கள் எவ்வித சிரமமின்றி மாணவர்களுக்கு கிடைத்திட ஏதுவாக ஆதாரில் உள்ள திருத்தங்களை மேற்கொள்வதற்கும், புதிய ஆதாரை பதிவு செய்வதற்கும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலம் (ELCOT) அனைத்து பள்ளிகளுக்கும் நேரடியாக சென்று பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற முகாமை தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்திரவிட்டுள்ளார்கள்.
தேனி மாவட்டம் முழுவதும் உள்ள 940 பள்ளிகளில் இம்முகாம் நடைபெற உள்ளது. ஒன்றியத்திற்கு ஒரு பள்ளி வீதம் ஒரு நாளைக்கு எட்டு பள்ளிகளில் விடுமுறை நாட்களை தவிர பிற நாட்களில் இம்முகாம் நடைபெறும்.
536 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இம்முகாம் இலவசமாக நடைபெறும். தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிர்ணயித்துள்ள குறைந்த கட்டணத்தில் இச்சிறப்பு முகாம் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றைய தினம் தேனி-அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இச்சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து, கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிக்கு வருகை தந்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும், கல்வி பயில்வதால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும், எனவே மாணவர்கள் நன்றாக கல்வி பயில வேண்டும் என மாணவர்களை வாழ்த்தி பாராட்டினார்.
இந்நிகழ்வில் தேனி-அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.பெருமாள், ஆசிரியர் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் திரு.டேவிட், .கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.