நாகர்கோவில் ஜூலை 30
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே பீகார் மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி திடீரென மரணமடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சாபுமண்டல் வயது42, இவர் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள மலையன்விளையில் தனியாருக்கு சொந்தமான ஒரு குடியிருப்பில் தங்கி இருந்து கட்டிடதொழில் உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து உடன் வசித்து வந்தவரின் துணையோடு கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் இரவு 10 மணிக்கு உணவு உண்டுவிட்டு தூங்கியவர் மறுநாள் (நேற்று) காலை இறந்து கிடந்து உள்ளார். இது குறித்து கொட்டாரம் கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் கொடுத்த புகாரின் படி தென்தாமரை குளம் போலீசார் விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.