தென்காசி, ஆக. 30 –
தென்காசி மாவட்டம், இலஞ்சி பேரூராட்சி இராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது: பொது மக்கள் உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் துவக்கி வைத்துள்ளார்கள். அதனடிப்படையில் தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சி இராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெறும் முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு மற்றும் மகளிர் நலம், குழந்தைகள் நலம், இருதயவியல், நரம்பியல், தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், இயன்முறை, நுரையீரல் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்து வகையிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை போன்ற அனைத்து சேவைகளும் தகுதியுள்ளவர்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் மருத்துவ சேவை முகாம் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. எனவே இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு. கோவிந்தன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு. பிரேமலதா, இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய், இலஞ்சி பேரூராட்சி மன்ற உதவி தலைவர் முத்தையா, வட்டார மருத்துவ அலுவலர் மரு. சுந்தராம்பாள், மற்றும் இலஞ்சி பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள், ஊழியர்கள், மாவட்ட சுகாதார அலுவலகத்தின் இரண்டாம் நிலை அலுவலர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



