தஞ்சாவூர், ஆகஸ்ட் 23 –
தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பழுப்பு தரமற்ற அரிசி குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ஏ.பி. நந்தகுமார். தஞ்சாவூர் அருகே புதுக்கோட்டை சாலை பிள்ளையார்பட்டி சேமிப்பு கிடங்கில் இருப்பில் உள்ள அரிசி மூட்டைகளை தமிழ்நாடு சட்டப்பேர வை பொது நிறுவனங்கள் குழு வினர் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூட்டைகளை ஊசியால் குத்தி சோதனையிட்டபோது பழுப்பு அரிசி வந்தது.
இது குறித்து அலுவலர்களிடம் குழுவினர் கேள்வி எழுப்பினர். அதற்கு அலுவலர்கள் கடந்த 2022-ம் ஆண்டிலிருந்து 1580 டன் இருப்பு உள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கோப்புகளை கொண்டு வருமாறு குழுவினர் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் குழுவின் தலைவர் ஏ.பி. நந்தகுமார் மேலும் கூறியதாவது: இந்த பழுப்பு அரிசி எதற்காக பயனற்று கிடக்கிறது? அவையெல்லாம் எப்போது, எப்படி அப்புறப்படுத்தப்படும்? இது தொடர்பான நடவடிக்கை என்ன எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து கேட்டுள்ளோம். இதை விநியோகம் செய்த அரவை முகவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்வர் 2021-ம் ஆண்டில் ஆட்சி க்கு வந்த பிறகு இத்துறையில் பழுப்பு நிற அரிசியை நீக்குவதற்கு நவீன சாதனம் பொருத்தப்பட்டது.
இதன் மூலம் தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் 99 சதவீதம் பழுப்பு அரிசி புகார் இல்லை. ஒரு சில கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இது மக்களுக்கு பயன்படுத்த முடியாது என்பதால் கால்நடை தீவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதுபோல செங்கல்பட்டு, தேனி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட குறைபாடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்து தொடர்புடைய அரவை முகவர்களை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளோம். தஞ்சாவூர் மாவட்ட த்திலும் குறைகள் கண்டறியப்பட்டால் அரவை முகவர்களை கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் நந்தகுமார்.
பின்னர் குழுவினர் திருமலை சமுத்திரம் துணை மின் நிலையம் அமைக்கும் பணி, ஒரத்தநாடு அரசு மகளிர் விடுதி கட்டுமான பணி, செங்கிப்பட்டி அருகே அயோத்திப் பட்டி மெடிகேர் என்விரோ மையம் ஆகியவற்றை ஆய்வு செய்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினர். இக்குழுவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், எம்.எச். ஜவாஹிருல்லா, வி.பி. நாகை மாலி, முதன்மை செயலர் சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றனர். ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



