களியக்காவிளை, ஆக. 18 –
களியக்காவிளை அருகே உதியன்குளம்கரை செங்கல் ஊராட்சிக்குட்பட்ட மகேஸ்வரத்தில் சிவபார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம், வைகுண்டம், தேவலோகம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் கணபதி மண்டபம் உள்ளது. இதில் கணபதி பகவானின் 32 முக பாவனைகளை குறிக்கும் வகையில் 32 கணபதி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறை சுற்றிலும் 12 சிவலிங்கங்கள் உள்ளது. கருவறையில் சிவன், பார்வதி தேவி அருளாசி வழங்குகின்றனர். மேலும் மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து இறை அருள் பெற்றுச் செல்கின்றனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் பக்தர்கள் வந்த செல்ல வசதியாக கேரளா அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அரசு பஸ் தினமும் இயக்குவதற்கான விழா நடந்தது.
இதில் கோயில் தலைமை அர்ச்சகர் குமார் தலைமை வகித்தார். கோயில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி முன்னிலை வகித்தார். நெய்யாற்றின்கரை தொகுதி எம்.எல்.ஏ ஆன்சலன் பஸ்சினை கொடி அசைத்து துவக்கி வைத்தார். கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பஸ் தினமும் மூன்று வேளை கோயிலில் இருந்து துவங்கப்பட்டு திருவனந்தபுரம் பை-பாஸ் லூலூ மால், டெக்னோபார்க் வழியாக கழக்கட்டத்திற்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.



