திருப்பூர், ஆகஸ்ட் 12 –
புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேதாஜி மைதானத்தில் இன்று நடைபெற்றது. 19785 பயனாளிகளுக்கு 1,426 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உடுமலை வந்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழா திடலுக்கு வரும் வழியில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு இருந்ததால் உற்சாகமடைந்த முதலமைச்சர் சாலையில் இறங்கி நடக்க தொடங்கினார். திடீரென முதலமைச்சர் சாலையில் இறங்கி நடந்ததால் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.
முதலமைச்சரின் திடீர் ரோடு ஷோ பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது வழிநெடுகிலும் தொண்டர்களுக்கு கை அசைத்தபடி சென்ற முதல்வர் தொண்டர்களிடம் மனுக்களை பெற்று செல்பி எடுத்துக் கொண்டும் விழா மேடையை வந்தடைந்தார். மேடைக்கு ஏறும் முன்பாக மாற்றுத்திறனாளி மற்றும் வேளாண் துறை விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ் தாய் வாழ்த்து உடன் நிகழ்ச்சி துவங்கியதும் 182 கோடி மதிப்பீட்டில் 32 முடிவற்ற திட்ட பணிகளையும் வேலம்பாளையம் புதிய அரசு மருத்துவமனை 39 கோடி மதிப்பீட்டில் டைட்டில் பூங்கா உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்.
மேலும், 61 புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசத் துவங்கிய முதலமைச்சர் திருமூர்த்தி மலை, அமராவதி அணை என இயற்கை வளங்கள் கொண்ட இந்த உடுமலையில் சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஊருக்கெல்லாம் சர்க்கரை அள்ளித் தரும் ஊர் இது எனவும், உடுமலை நாராயண கவியை கொடுத்த ஊர், இது சாதிக் பாஷாவை கொடுத்த ஊர் என உடுமலை குறித்து பேசினார். மேலும் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் பற்றி பேசுகையில்: மொழி போராட்டத்தில் பங்கேற்று 45 நாட்கள் சிறை சென்றவர். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக சாதிக்க கூடியவர் சாமிநாதன். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிலை நிறுவ முனைப்பு எடுத்தவர் என பேசினார்.
மேலும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அமைதியாக செயல்படும் அவரது பணி பாராட்டத்தக்கது எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுவதாக அவர்களுக்கும் தனது பாராட்டை தெரிவித்தார். கலைஞரால் மாவட்டமாக உருவாக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 10,491 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது. 133 கோவில்களுக்கு குடமுழுக்கு 5 சிறிய அளவிலான ஜவுளி பூங்கா 3 பாலம் உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளது. மேலும் 2006 ஆம் ஆண்டு திமுக அரசியல் கொண்டுவரப்பட்ட மேம்பாலப் பணிகளை அதிமுக அரசு கிடப்பில் போட்டது. அதனை மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து பலமுறை குரல் கொடுத்துள்ளோம். மேலும் ஆட்சிக்கு வந்த பின்னர் அதனை நிறைவேற்றி பயன்பாட்டிற்கும் கொண்டு வந்துள்ளோம். 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெற காரணமாக இருந்த நான்கு பேருக்கு நம் அரசு சிலை அமைத்துள்ளது. அடுத்து அதனை திறக்க உள்ளோம் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து திருப்பூருக்கு வந்துவிட்டு புதிய திட்டங்களை அறிவிக்காமல் சென்றால் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் என்னை விட மாட்டார்கள். ஏன் மக்களே என்னை விட மாட்டார்கள் என தெரிவித்த முதலமைச்சர் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் வாய்க்கால் தருவாரும் பணிக்கு 10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் மாவட்ட மையம் நூலக கட்டிடம் ஒன்பது கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனவும் 5 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு விளையாட்டு மையம் மற்றும் 11 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம் காங்கேயத்திற்கும் 7 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணைகள் அமைக்கப்படும் எனவும் ஊத்துக்குளி பகுதியில் 6.5 கோடி மதிப்பீட்டில் புதிய வெண்ணை தொழிற்சாலை அமைக்கப்படும் எனவும் திருப்பூர் சாந்தி திரையரங்கம் அருகில் உள்ள சாலைக்கு சாதிக் பாஷா பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி தான் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என தெரிவித்துக் கொள்கிறார். ஆனால் அவரை விட மேற்கு மண்டலத்திற்கு அதிக நலத்திட்டம் திமுக ஆட்சியில் தான் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் தோல்வி இங்கிருந்து தான் துவங்க உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி எந்த தைரியத்தில் சுந்தரா ட்ராவல்ஸ் வண்டியில் பிரச்சாரம் செய்கிறார் என தெரியவில்லை. பொய்களை உரக்க பேசினால் உண்மையை மறைத்து விடலாம் என நினைத்துள்ள அவரது ஆசையில் மண் விழுவதைப் போல உங்களுடன் ஸ்டாலின் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மக்களுக்கு நல்லது நடந்துவிடக்கூடாது என நீதிமன்றத்தை பின்னாடி உள்ளார். ஆனால் மக்கள் நலத்திட்டங்களை தடுக்கக்கூடாது என சிவி சண்முகத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது அவமானம் இல்லையா. இதனால் பிறப்பின் உச்சத்திற்கு எடப்பாடி சென்று விட்டார். தரம் தாழ்ந்து என்னை ஒருமையில் பேசுகிறார். நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை.
மக்கள் பணி தான் எங்களுக்கு பணி. அவர் என்னைப் பற்றி இன்னும் பேசட்டும். திராவிட மாடல அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையானவற்றை தேடி செய்து வருகிறது. இது தொடர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். இது என்றும் தொடரும். இதுவரை அடையாத உச்சங்களை தமிழகம் நிச்சயம் அடையும். உங்களுடன் சேர்ந்து இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் பயணிப்பேன் என பேசி தனது உரையை நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுவினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து பொள்ளாச்சிக்கு முதலமைச்சர் புறப்பட்டார்.



