தூத்துக்குடி, ஆகஸ்ட் 04 –
தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு இந்த தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.
முதற்கட்டமாக ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அடங்கும். முதற்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வி.எப்-6, வி.எப்-7 ஆகிய வகை கார்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்த தொழிற்சாலை மூலம் சுமார் 3,500 பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
இந்நிலையில், வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்றது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஆலையை திறந்து வைத்து கார் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், மனோ தங்கராஜ், தா.மோ. அன்பரசன், ஓட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் , ஒன்றிய செயலாளர் இளைய ராஜா, காசி விஸ்வநாதன், கோவில் பட்டி நகரத்தலைவர் கருணாநிதி, தமிழக அரசு அதிகாரிகள், வின்பாஸ்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஃபாம் சான் சவ், தலைமை செயலாளர் நா. முருகானந்தம், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் வி. அருண் ராய், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மருத்துவர் தாரேன் அகமது, தமிழ் நாடு தொழில் வழிகாட்டி செயல் இயக்குநர் மருத்துவர் பு. அலர்மேல்மங்கை, வின்ஃபாஸ்ட் இந்திய ஆட்டோ நிறுவனத்தின் திட்ட இயக்குனர் பிரகலாதன் திரிபாதி அரசு அதிகாரிகள், வின்ஃபாஸ்ட் அதிகாரிகள், தொழில் முதலீட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.