இராமேஸ்வரம், ஜுலை 29 –
ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆடித்திருவிழாவின் பத்தாம் நாளில் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பு. ஆடிப்பூரத்தை முன்னிட்டு மஞ்சள் நீராடல் சிவதீர்த்ததில் தீர்த்தம் கொடுத்தல், கன்னிப் பெண் பூஜைகள் நடைபெற்றது.
இதில் தீர்த்த மூர்த்தி ஸ்தலம் முப்பெருமை உடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் ஆடித்திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தாண்டுக்கான ஆடித்திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆடித்திருவிழாவின் பத்தாம் நாளில் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி ரத வீதியில் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தாள். அதனை தொடர்ந்து அம்பாளுக்கு மஞ்சள் நீராடல் நிகழ்வு நடைபெற்றவுடன் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சிவதீர்த்தத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
இதையடுத்து தீர்த்தவாரி உற்சவருக்கு மஞ்சள், சந்தனம், பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. கன்னிப் பெண்களால் விளக்கு கொண்டு வரப்படும் சிவ தீர்த்தத்தில் விட்டனர். மேலும் ஆடி திருவிழா முக்கிய நிகழ்வாக நாளை ராமர் தீர்த்தம் தெருவில் தபசு மண்டகப்படியில் சுவாமி அம்பாளுக்கு மாலை மாற்றுதல் நிகழ்வும் இரவு பூப்பல்லக்கில் தபசு மண்டகபடியில் இருந்து எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் 30.07.25 தெற்கு வாசலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.