பூதப்பாண்டி, ஜுலை 26 –
குமரி மாவட்டத்தில் நெல் விவசாயம் ஒரு முக்கிய தொழிலாகும். பேச்சிப்பாறை அணையிலிருந்து தோவாளை சானல், அனந்தநார் சானல் மற்றும் புத்தனார் சானல் ஆகிய சானல் வழியாக விவசாயம் செய்ய நீர் செல்கிறது. கோடை காலம் முடிந்து கன்னிப்பூ சாகுபடிக்காக வருடம் தோறும் ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்துவிட்டு நெல் விதைப்பு மற்றும் நாற்றுகள் தயார் செய்து விவசாயம் செய்து வருகிறார்கள்.
ஆனால் இந்த வருடம் அனந்தநார் சானல் பகுதியில் ஒரு சில இடங்களில் பணிகள் நடந்ததால் இந்த அனந்தநார் சானலில் ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. அதை நம்பி நெல் விதைத்த மற்றும் நாற்றாங்கால் நாற்றுகள் எல்லாம் பட்டு போகும் சூழ்நிலை ஏற்பட்டு விவசாயிகள் போராடி வந்தனர். ஆனால் காலதாமதமாக வந்த தண்ணீரால் நெல் பயிர்கள் ஆரோக்கியமான சூழலில் வளராமல் எப்படியோ பிழைத்தால் சரி என்ற சூழ்நிலையில் விவசாயிகளும் நெல் பயிர்களும் உள்ளன.
இந்நிலையில் அனந்தநார் சானலில் பூதப்பாண்டியை அடுத்துள்ள மார்த்தால் பெரிய பாலம் அருகே சானல்கரையோரமாக பக்க சுவர் சுமார் அறுபது அடி நீளத்திற்கு மேல் இடிந்து சானலில் விழுந்துள்ளது. இதனால் உடைப்பு ஏற்படுமா மீண்டும் ஒரு தண்ணீர் தட்டுப்பாடா என விவசாயிகள் வேதனையில் உள்ளார்கள்.