திருப்புவனம், ஜூலை 25 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். குறிப்பாக காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலம் திருப்புவனம் ஆகும். அந்த வகையில் திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி வழிபடுவதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதனால் இந்துக்கள் பலரும் திருப்புவனம் வைகை ஆற்றில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, மஹாளய அமாவாசை உள்ளிட்ட தினங்களில் திதி, தர்ப்பணம் வழங்குவது வழக்கம், ஆடி அமாவாசை என்பதால் அதிகாலை ஐந்து மணி முதல் ஏராளமான பக்தர்கள் கார், வேன், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் திதி, தர்ப்பணம் வழங்க குவிந்தனர். வைகை ஆற்றினுள் கொட்டகை அமைக்கப்பட்டு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கிய பின் புஷ்பவனேஷ்வரரை வணங்கி சென்றனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு புஷ்பவனேஷ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திதி, தர்ப்பணம் வழங்கிய பக்தர்கள் பசு மாட்டிற்கு அகத்தி கீரை உள்ளிட்டவைகளை வழங்கினர். ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு அதிகளவில் பக்தர்கள் வந்ததால் பாதுகாப்பு பணிக்காக முன்னெச்சரிக்கையாக மானாமதுரையில் இருந்து தீயணைப்பு வாகனம் மற்றும் மீட்பு பணி வீரர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். நெரிசலை தவிர்க்க போலீசார் நான்கு மாட வீதிகளிலும் வாகனங்களுக்கு தடை விதித்திருந்தனர்.