சென்னை, ஜூலை 25 –
சென்னை அடுத்த மாங்காடு நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் குறை தீர்ப்பு முகாம் வசந்தபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த முகாமை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் துவக்கி வைத்து ஆய்வு செய்தனர். இதில் நகராட்சி தலைவர் சுமதி முருகன், நகராட்சி ஆணையர் ராணி, துணைத் தலைவர் ஜபருல்லா, நகராட்சி பொறியாளர் குமார், நகராட்சி ஆர்.ஐ. வினோத், குன்றத்தூர் வட்டாட்சியர் சேரந்தையன், வார்டு கவுன்சிலர் பெருமாள்ராஜ், வசந்தபுரம் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் மாங்காடு நகராட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இந்த விழாவில் பங்கேற்ற செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசிய போது: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மாங்காடு நகராட்சி பகுதியில் மக்களிடமிருந்து ஏறாளமான மனுக்கள் வாங்கப்பட்டுள்ளன. பெறப்பட்ட 15 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் 200 மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த திட்டத்தின் மூலம் மக்கள் தங்கள் குறைகளை கூறுவதற்கு அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் வீடு தேடி அதிகாரிகள் வந்து குறைகளை தீர்ப்பதாக மக்கள் கூறுவதாகவும் தெரிவித்துக் கொண்டார். இந்தத் திட்டத்தின் மூலம் விடுபட்டுப் போன மக்களின் குறைகளும் தீர்க்கப்படுகின்றன. குறிப்பாக தமிழக முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றியது மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்துள்ளார் என்பது நல்லாட்சிக்கான சான்று என குறிப்பிட்டார்.