தக்கலை, ஜூலை 25 –
தக்கலை அருகே வயக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெனோ பிரசாத் (20). இவர் நாகர்கோவில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் விஜில் பிரசாத் (40) ராணுவ வீரர். இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெனோ பிராசாத் தனது தாயுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது விஜில் பிரசாத் வழிமறித்து எனது வீட்டில் உள்ள கோழியை காணவில்லை நீதான் பிடித்து சென்று விட்டாய் எனக் கூறி ஜெனோவிடம் தகராறு செய்துள்ளார்.
மேலும் ஆத்திரடைந்தவர் ஜெனோ பிரசாத்தை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதில் காயமடைந்த ஜெனோ பிரசாத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான விஜில் பிரசாத்தை தேடி வருகின்றனர்.