மார்த்தாண்டம், ஜூலை 23 –
கன்னியாகுமரி மாவட்ட மலை பகுதிகளில் பத்துகாணி, ஆறுகானி, களியல், சிலோன் காலனி, செண்பகத்தரிசு போன்ற பல மலை கிராமங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் பத்துகாணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் 3 பேர் கொண்ட கும்பல் திடீரென சென்று மக்களிடம் வசூல் வேட்டை நடத்தியுள்ளனர். பணம் தராத நபர்களிடம் உணவு பொருட்கள் உதவி கேட்டுள்ளனர். எதுவும் தரமுடியாது என்றவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள டீக்கடைகளிலும் அவர்கள் அமர்ந்து டீ குடித்ததுடன் மக்களுடன் பேசிக் கொண்டு சென்றுள்ளனர். அந்த நபர்கள் நக்சல்கள் என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இந்த தகவல் பொதுமக்கள் மூலம் குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு தெரியவந்தது.
இதையடுத்து கியூ பிராஞ்ச் உட்பட உளவு பிரிவு போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். பத்துகாணியில் விசாரணை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அந்த கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். நேற்று மூன்றாவது நாளாகவும் கியூ பிராஞ்ச் போலீசார் மற்றும் தீவிரவாத ஒழிப்பு படை மூலம் சோதனை நடந்ததாக தெரிய வருகிறது.