நாகர்கோவில், ஜுலை 18 –
காமராஜர் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவாவின் கட்சி பதவியை பறிப்பதோடு கட்சியிலிருந்தும் இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காமராஜர் பிறந்தநாளன்று சென்னை பெரம்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா காழ்ப்புணர்ச்சியில் காமராஜரின் கடந்த கால வாழ்க்கையை விமர்சித்துள்ளார். இதை யாரும் ஏற்று கொள்ளக்கூடியது அல்ல. காமராஜர் மரணிக்கும் போது அவரிடம் 67 ரூபாய் தான் இருந்திருக்கிறது. வங்கி கணக்கில் 125 ரூபாயே இருந்திருக்கிறது. இது நாடறிந்த உண்மை.
முதலமைச்சராக இருந்தவர், காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய அளவில் தலைவர் பதவி வகித்தவர், எம்.பி யாக இருந்தவர், லால்பகதூர், இந்திரா காந்தி பிரதமராக வழி வகுத்தவர், தனக்கென்று மக்களை தவிர வேறு எதுவும் சேர்த்து வைக்காத ஏழை பங்காளன் தான் காமராஜர். இந்த உண்மைகளை இருட்டில் மறைக்க நினைத்து காங்கிரசார் மீதும் காமராஜர் மீதும் அவதூறு பரப்பும் நோக்கில் பேசியிருப்பது ஏற்புடையது அல்ல. காமராஜர் மீது களங்கம் ஏற்படுத்திய திருச்சி சிவாவின் மீது திமுக தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவில் அவர் வகித்து வரும் துணை பொதுச்செயலாளர் பதவியை பறிப்பதோடு கட்சியிலிருந்தும் இடை நீக்கம் செய்ய வேண்டும். அதே நேரம் காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். திமுக வோடு கூட்டணி மட்டுமே போதும் என்றிருந்தால் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகி விடும். இவ்வாறு முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.