விழுப்புரம், ஜூலை 16 –
விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியம் ஆலம்பாடி ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் க. பொன்முடி துவக்கி வைத்தார். அப்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு தேவையான அரசு சேவைகள் மற்றும் திட்டங்களை வீட்டிற்கு வந்து கேட்டறிந்து தீர்வு காணும் விதமாக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவங்கப்படும் என அறிவித்தார்கள். அதன்படி இன்றைய தினம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் முகையூர் ஊராட்சி ஒன்றியம் ஆலம்பாடி ஊராட்சி தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தார்த்தூர் மற்றும் ஆலம்பாடி ஊராட்சி சார்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகராட்சி, செஞ்சி பேரூராட்சி, விக்கிரவாண்டி, மரக்காணம், முகையூர், கண்டமங்கலம் ஆகிய பகுதிகளுக்கான முகாம்கள் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் 291 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதில் 236 முகாம்கள் ஊரக பகுதிகளிலும் 55 முகாம்கள் நகர் பகுதிகளிலும் நடைபெற உள்ளது. இம்முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அரசுத் துறையினை நாடிச் சென்று கோரிக்கை மனுக்கள் வழங்கும் நிலையினை மாற்றி அரசு துறைகள் மக்களை நாடிச் சென்று கோரிக்கை மனுக்கள் பெறும் நிலை உருவாக்க வேண்டும் என்பதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஊராட்சி பகுதிகளில் பத்தாயிரம் என்கிற மக்கள் தொகை அடிப்படையில் ஒரு முகமும் நகர்ப்பகுதியில் ஐந்து வார்டுகளுக்கு இரண்டு முகாமும் பேரூராட்சி பகுதிகளுக்கு இரண்டு முகாம்கள் என்கிற அடிப்படையில் மாவட்ட முழுவதும் 291 முகாம்கள் நடைபெற உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்கள் வழங்கும் பொது மக்களுக்கு கோரிக்கை மனு தொடர்பாக எந்த வகையான ஆவணங்களுடன் கோரிக்கை மனுக்கள் வழங்கிட வேண்டும் என்பதை தெரிவித்திடும் பொருட்டு முகாம்கள் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பதாகவே தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடுகளும் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை வழங்கிடும் விதமாக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தன்னார்வலர்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை எழுதி தருவதுடன் எந்த துறையில் வழங்கிட வேண்டும் என்ற வழிகாட்டுதலின் வழங்குவார்கள். ஆகையால் பொதுமக்கள் முகாமினை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் கோரிக்கைகளை வழங்கிடலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உதவிய ஆற்றிய (பயிற்சி) வெங்கடேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் வளர்மதி, தனித்துணை ஆட்சியர் முகுந்தன், முகையர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தனலட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், கண்டாச்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் முத்து, முகையூர் வட்டார வர வளர்ச்சி அலுவலர் பாலசந்தர், ஸ்ரீதர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி, ஆலம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜகுமாரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.