கோவை, ஜூலை 15 –
கோவை காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் 31-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டி.ஜி.எம். தினகரன் கலையரங்கில் நடைபெற்றது. துணைவேந்தர் பிரின்ஸ் அருள்ராஜ் அனைவரையும் வரவேற்றார். மிசோராம் மாநிலத்தின் முதல் மந்திரி லால்டுகோமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில், இந்தியா மிகப்பெரிய ஆற்றல் மற்றம் சிக்கலான சவால்களைக் கொண்ட நாடு. நீங்கள் கற்ற கல்வி உங்கள் வாழ்க்கைக்கு மட்டுமல்ல தேசத்தின் சிக்கல்களை மாற்றுவதற்கான கருவியாக இருக்கட்டும். தேசத்தை கட்டுபவர்களாக, அமைதியை நிலைநாட்டுபவர்களாக மாறுங்கள் என்றார். துணைவேந்தர் ஆண்டறிக்கையை வாசித்தார். காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமை தாங்கி மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், நீங்கள் கற்ற கல்வியும், சிறந்த வாழ்க்கை நெறி முறைகளும் நீங்கள் வெற்றியடைய வழிகாட்டும் என்றார். மிசோராம் மாநிலத்தின் முதல் மந்திரி லால்துகோமாவின் தலைமைத்துவத்தையும், சேவைகளையும் பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.