நாகர்கோவில், ஜூலை 14 –
குமரி மாவட்டத்தில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலேயே இதுவரை எந்த ஒரு காவல் உயர் அதிகாரியும் செய்யாத செயலை குமரி மாவட்ட 54-வது எஸ்பியாக பொறுப்பேற்று பணி செய்து வரும் ஸ்டாலின் செய்து வருகிறார். சாதாரண அரசு பள்ளியில் பயின்று ஐஏஎஸ் அதிகாரியான இவர் தான் முதலில் தேர்ந்தெடுத்த மருத்துவத் துறையை துறந்து மக்களை பாதுகாப்பதற்காகவே காவல்துறையை தேர்ந்தெடுத்தவர் ஆவார். குமரி மாவட்டத்தில் எஸ்பி ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட நாள் முதல் பொதுமக்கள் பாதுகாப்பிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும், காவலர்களின் தேவைகள் அறிந்தும் செயலாற்றுவதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
குமரி மாவட்டத்தில் போலீசாரருக்கும் பொது மக்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அதிரடி திட்டங்களை ஏற்படுத்தி அதை நடைமுறையும் படுத்தி வருகிறார். அந்த வகையில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தை தொடங்கி ஒரு கிராமம் அங்கு ஒரு காவலர் அப்பகுதியில் இரண்டு சிசிடிவி கேமராக்கள் நிறுவி அப்பகுதியில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமலும், குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் அதை செய்தது யார் என்பதை கண்டறியவும் உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போலீசார் சம்பவ இடத்தை துல்லியமாகக் கண்டறிந்து குற்ற சம்பவங்களை தடுக்கும் வாய்ப்பை கிராமப்புறங்களில் ஏற்படுத்தி மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்நிகழ்வு இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலேயே இதுதான் முதல் முறை ஆகும்.
ஆரம்பத்தில் இத்திட்டம் ஒரு சில கிராமங்களில் மட்டுமே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது குமரி மாவட்டம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கிராமப்புற பொதுமக்களின் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்திய எஸ்பி ஸ்டாலினின் இத்தகைய வியத்தகு செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மேலும் எஸ்பி ஸ்டாலின் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் முன்னுரிமை அளித்து வருவது மட்டுமல்லாமல் சாலை போக்குவரத்து விதி மீறல்களில் ஏற்படும் விபத்துகளை முற்றிலும் தடுக்கும் நோக்கில் விபத்தில்லா குமரி என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்ததின் விளைவாக சாலை விபத்துகள் 60% குறைந்து உள்ளது.
மேலும் போலீஸ் பணியில் பல நெருக்கடிகளை சந்தித்து விடுமுறை மற்றும் உடல் உபாதை போன்றவற்றினால் கடும் இன்னல்களுக்கு ஆளாகி மன வேதனையில் உள்ள காவலர்களுக்கு குறை தீர்ப்பு முகாம் நடத்தி அவர்களின் தேவைகளை கேட்டறிந்து பெரும்பாலான காவலர்கள் நின்று கொண்டே பணி செய்வதால் வெரிகோஸ் நோயினால் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதை அறிந்த அவர் உடனடியாக மருத்துவ முகாம்களை அமைத்து நோயினால் பாதிக்கப்பட்ட போலீசாருக்கு போதிய மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தும் சாலைகளில் அவர்கள் நின்று கொண்டே பணி செய்யாமல் இருக்க இருக்கையுடன் கூடிய பேரி கார்ட் அமைத்தும் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து காவலர்களுக்கு விடுமுறை எடுப்பதில் உள்ள சில சிக்கல்களை அறிந்த அவர் காவலர்களின் விடுமுறைக்காக ஒரு தனி ரெஸ்ட் ஆப் செயலியை உருவாக்கி அதன் மூலம் காவலர்கள் தடை இன்றி விடுமுறை பெற்றுக்கொள்ள தமிழ்நாட்டிலேயே குமரி மாவட்டத்தில் முதல்முறையாக உருவாக்கி காவலர் குடும்பங்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
இவ்வாறு குமரி மாவட்ட மக்களின் பாதுகாப்பிலும் போலீசாரின் தேவைகளையும் அறிந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி வாகை சூடி வரும் எஸ்பி ஸ்டாலின் தன்னுடைய ஓய்வு குறைத்து தினந்தோறும் 12 முதல் 2 மணி வரை தன்னைத் தேடி வந்து மனு அளிக்கும் பொது மக்களின் மனுவை அவர்கள் நடுவில் நின்று பெறுவது மட்டுமல்லாமல் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் மனு அளிக்க வந்தால் அவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை எல்லாம் கேட்டறிந்து உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு துரித நடவடிக்கை எடுத்து வருகிறார்.
காவல்துறை உங்கள் நண்பர் என்ற சொல்லை தினந்தோறும் நிரூபித்து காட்டி வரும் எஸ்பி ஸ்டாலின் செயலை பொதுமக்கள் பாராட்டி குற்றமில்லா குமரியை உருவாக்க ஓய்வறியாது ஓடிக்கொண்டிருக்கும் எஸ்பி ஸ்டாலினுக்கு ராயல் சல்யூட் என கூறி தங்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.