பரமக்குடி, ஜூலை 11 –
பாஜக உடன் கூட்டணி வைத்து அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கையை குழி தோண்டி புதைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாற்று கட்சியிலிருந்து விலகி 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு செய்தியாளர்களுடன் பேசுகையில்: அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டுமென்றால் 2026-ல் திமுகவை அகற்ற வேண்டும் என ஹெச். ராஜா கூறியுள்ளார் என்ற கேள்விக்கு அடுத்த தலைமுறையினர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தமிழ்நாட்டின் மொழி, தமிழ்நாட்டின் மண் சார்ந்த மரபுகள், தமிழ்நாட்டின் உரிமைகள் காப்பாற்றப்பட முடியும் என கூறினார்.
கோயில் பணத்தில் கல்லூரி கட்டப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்து உள்ளார் என்ற கேள்விக்கு எந்த பாரம்பரியத்தில், எந்த வழிமுறையில் வந்தோம் என்பதை அடியோடு முற்றிலுமாக எடப்பாடி பழனிச்சாமி மறந்துவிட்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா ஆகியோரை மறந்து விட்டு எந்த கொள்கைக்காக தொடங்கப்பட்டதோ அதனை குழி தோண்டி புதைத்து விட்டு பாஜகவில் தன்னையும், அதிமுகவையும் பாஜகவின் கொள்கைகளோடு ஐக்கியப்படுத்திக் கொண்டு அதிமுகவின் தனித்தன்மையை நீர்த்துப்போக செய்திருக்கிறார் என கூறினார்