தருமபுரி, ஜூலை 9 –
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள சாலியா பேரீச்சை நர்சரியில் இருந்து பாலக்கோடு, மொரப்பூர், கம்பைநல்லூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, பர்கூர், காவேரிப்பட்டினம், ஓசூர் ஆகிய பகுதிகளில் பேரீச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பேரீச்சை அறுவடை தொடங்கும். இந்த ஆண்டு சற்று காலதாமதமாகி ஜூலை மாதத்தில் பேரீச்சை அறுவடை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மரத்திலும் குலை குலையாய் தொங்கும் பேரீச்சை பழங்களை விவசாய தொழிலாளர்கள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அறுவடை செய்யப்பட்ட பேரீச்சை பழங்களை உள்ளூர் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். பேரீச்சை திசு மூலமாக உற்பத்தி செய்து பசுமை குடிலில் வளர்க்கப்பட்டு நன்கு திராட்சியான பிறகே செடிகள் விற்பனைக்கு வருகிறது. இதை வாங்கி நடவு செய்து இரண்டு ஆண்டுகளில் காய்க்க தொடங்கிவிடும். தொடங்கிய முதல் வருடத்தில் ஒவ்வொரு மரத்திலும் 50 கிலோ வரை காய்க்கும். மூன்று ஆண்டு பருவத்தில் 100 கிலோ வரையிலும், ஐந்தாண்டு பருவத்தில் 300 கிலோ வரையும் காய்க்கும் தன்மை கொண்டது. பேரீச்சை ரகத்துக்கு ஏற்றார் போல் ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது.