ஈரோடு, ஜூலை 9 –
அந்தியூர் அருகே உள்ள பட்லூர் சொக்கநாதமணியூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் ஜெயசூர்யகுமார் (வயது 11). சம்பவத்தன்று இரவு ஜெயசூர்யகுமார் வீட்டின் வாசல் பகுதியில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது சிறுவனுக்கு திடீரென கடுமையாக வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் பெற்றோர் அவனை சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுவன் சுயநினைவை இழந்து உயிருக்கு போராடினான். இதைத்தொடர்ந்து சிறுவன் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.
இதற்கிடையில் வீட்டில் சிறுவன் தூங்கிய இடத்தில் கட்டு விரியன் பாம்பு கிடந்ததை உறவினர்கள் பார்த்தனர். உடனே இது பற்றி டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் டாக்டர்கள் விரைந்து செயல்பட்டு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட சிறுவனை 2 நாட்கள் வெண்டிலேட்டரில் வைத்து 20 டோஸ் பாம்பு கடி விஷமுறிவு மருந்து கொடுத்தனர். மேலும் மூக்கு வழியாக சிறுவனுக்கு 3 நாட்கள் உணவு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் சிறுவனுக்கு நுரையீரல் மூச்சுப்பயிற்சி அளிக்கப்பட்டது. 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ஜெய சூர்யகுமார் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினான். சிறுவனின் உயிரை காப்பாற்றிய டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.