தென்தாமரைகுளம், ஜூலை 8 –
சாமிதோப்பு கோவிலில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தர்மம் எடுத்து சாமிதோப்பு பஸ் பஸ்டாப்பில் தங்குவது வழக்கம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அங்கு தங்கியிருந்த நபரிடம் சாமிதோப்பு செட்டிவிளையை சேர்ந்த நாராயணவடிவு என்பவரது மகன் குருசாமி என்ற ராஜா என்பவர் இங்கு தங்க கூடாது கோவிலில் போய் தங்கு என சத்தம் போட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோல் சனிக்கிழமை இரவு பஸ் ஸ்டாப்பில் வைத்து மீண்டும் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் குருசாமி என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அடையாளம் தெரியாத நபரின் நெஞ்சு பகுதியில் குத்தி கொலை செய்தார்.
இது குறித்து அருகில் உள்ளவர்கள் தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலையாளியை கண்டுபிடிக்க தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
பின்னர் கொலை செய்தது செட்டிவிளை பகுதியை சேர்ந்த குருசாமி என்ற ராஜா என்பவர் என்பதை அறிந்த போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து குருசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டவருக்கும் எனக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. சனிக்கிழமை இரவு சாமிதோப்பு பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழற்குடைக்கு அருகே இருந்த நபரிடம் ஏற்கனவே உள்ள விரோதத்தில் இங்கு படுக்கக் கூடாது ஒழுங்கா கோவிலில் போய் படு இங்கிருந்தா நடப்பது வேறு என அவதூறு வார்த்தை பேசி சத்தம் போட்டேன்.
ஆனால் அந்த நபர் நான் போகமுடியாது உன்னால் என்ன செய்யமுடியுமோ செய் என சத்தம் போட உடனே நான் இந்த ஏரியாவில் பெரிய ரவுடி என்னையே எதுத்து பேசுவியா என சத்தம் போட்டு இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து நீ உயிரோடு இருந்தா தானே இங்கு வந்து இருப்பாய் என ஆவேசமாக பேசி இத்தோடு செத்து தொலைந்து போ என சொல்லி கத்தியால் அவனது இடது பக்க மார்பில் குத்தி கொலை செய்தேன் என கொலையாளி குருசாமி வாக்குமூலமாக போலீசாரிடம் தெரிவித்தார்.
கொலை குற்றவாளி குருசாமி மீது கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சரவணன் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார். மேலும், கொலை செய்யப்பட்ட நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.