நாகர்கோவில், ஜூலை 4 –
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் வருகிற 31-ம் தேதி வரை சமரச தீர்வு முகாம்கள் நீதிமன்றங்களில் நடைபெறுகிறது என்று நீதிபதி உதயசூரியா கூறியுள்ளார். குமரி மாவட்ட சமரச தீர்வு மைய இணை ஒருங்கிணைப்பாளர் நீதிபதி உதயசூரியா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க சமரச தீர்வு மையம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2014 ஏப்ரல் முதல் கடந்த மாதம் 30ம் தேதி வரை குமரி மாவட்டத்தில் 7872 வழக்குகள் சமரச தீர்வு மையத்திற்கு வந்துள்ளது. இதில் 904 வழக்குகள் சமரச தீர்வு மைய மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளது. 4021 வழக்குகளில் சமரசம் ஆகவில்லை. 2616 விளக்குகள் விசாரணைக்கு ஆஜரானவர்கள் விருப்பமில்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து மீண்டும் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
331 வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி கடந்த 1ம் தேதியில் இருந்து சிறப்பு சமரச தீர்வு முகாம் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. தொடர்ந்து 31ம் தேதி வரை இந்த சிறப்பு முகாம் நடக்கிறது. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மண வாழ்க்கை, சொத்து வழக்கு, பணம் பிரச்சனை, காசோலை வழக்கு, நிதி நிறுவனத்தில் பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கு, குற்ற வழக்குகளில் சமரசம் ஏற்படக்கூடிய வழக்குகள், மோசடி வழக்குகள், வங்கி தொடர்பான வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் சமரச தீர்வு மையத்தில் தீர்வு காணப்பட உள்ளது.
சமரச தீர்வு மையத்தில் பயிற்சி பெற்ற மீடியேட்டர் மூலம் வழக்குகள் பேசி முடிக்கப்படுகிறது. நாகர்கோவில், தக்கலை, இரணியல், பூதப்பாண்டி, குழித்துறை ஆகிய கோர்ட்டுகளில் இந்த ஒரு மாதமும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தற்பொழுது பெறப்படும் மனுக்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சமரச தீர்வு மையம் செயல்படும். சமரச தீர்வு மையத்தில் ஆன்லைன் மூலமாகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த சிறப்பு முகாம் மூலம் அதிகமான வழக்குகளை பேசி முடிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி வழக்குகளை விரைந்து முடித்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.