பெருங்களத்தூர், ஜூன் 30 –
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட பெருங்களத்தூரில் அமைந்துள்ள ஏரி ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் ஆர்.ஐ. மாவட்டம் 3234 மற்றும் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் இணைந்து ஏரியை புதுப்பிக்கும் பணி முடிவுற்ற நிலையில் பொது மக்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவிற்கு தலைமை வகித்தார்.
புதுப்பிக்கப்பட்ட பெருங்களத்தூர் ஏரியை தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா ரிப்பன் வெட்டி பெயர் பலகை திறந்து வைத்து பொது மக்களுக்கு ஒப்படைத்தார். இதில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் டி. காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சேகர், புகழேந்தி, ரோட்டரி அமைப்பின் தலைவர் செல்ல கிருஷ்ணா, செயலாளர் ராஜேஷ், மணி திட்ட இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன், ஏரி மீளுருவாக்க குழு தலைவர் ரோட்டரியன் பி.என். மோகன், எக்ஸ்னோரா மோகனசுந்தரம், ராதா ஸ்ரீனிவாசன், டி.கே. சீனிவாசன், சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த புதுப்பிக்கப்பட்ட பணி கார்ப்பரேட் சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் ரியால்டோ என்டர்பிரைசஸ் பிவிடி லிமிடெட் மற்றும் டெல்பி- டிவிஎஸ் டெக்னாலஜீஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் நிதியுடன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.