கோவை, ஜூன் 30 –
கோவை மாவட்டம் காரமடை ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி அனுஷ்யா அனைவரையும் வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் முனைவர் சி.என். ரூபா தலைமையேற்று தலைமை உரையாற்றினார். காரமடை காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் காரமடை கேமியா பவுண்டேசன் பொதுச்செயலாளர் டாக்டர். பமீலா சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
அவர்கள் பேசிய உரையில் போதை அது அழிவின் பாதை. சமுதாயத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் எதிரான உலக அளவில் உள்ள பிரச்சினை. இதனை வேரோடு களைய வேண்டும். வயது வரம்பு இன்றி போதைப் பழக்கம் சமுதாயத்தில் வேரூன்றி உள்ளது. தவறான நட்பினால் இன்றைய இளைஞர்கள் இப்பழக்கத்திற்கு அடிமையாகி பல குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சமுதாயமும், அவர்கள் குடும்பமும் பாதிக்கப்படுகிறது. உபயோகிப்பவரின் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
மனக்கட்டுப்பாடும், சுய முயற்சியும் இருந்தால் எளிதாக அதிலிருந்து மீண்டு வர முடியும். யாராவது போதைப்பொருளை பயன்படுத்துவது தெரிந்தால் காவலன் செயலி மூலம் அதனை காவல்துறைக்கு தெரிவிக்கலாம். காவல்துறை அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்று மாணவர்களுக்கு பல கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பிற்கான உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திருமதி. உமா ப்ரியா அவர்கள் செய்திருந்தார்.