ராமநாதபுரம், ஜுன் 28 –
தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் இயங்கி வரும் நியாய விலை கடைகளில் பணி புரியும் விற்பனையாளர்கள் சந்தித்து வரும் பல்வேறு இடர்பாடுகளை களைவது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குஞ்சர பாண்டியன், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, கௌரவத் தலைவர் முத்துராமலிங்கம், கௌரவச் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நியாயவிலை கடைகளில் தற்போது புளூ டூத் மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு விற்பனை மேற்கொள்ளும் போது ஒரு குடும்ப அட்டைக்கு பொருள் விநியோகம் செய்திட குறைந்த பட்சம் எட்டு நிமிடங்களில் இருந்து பத்து நிமிடம் வரை ஆகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 50 குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே விநியோகம் செய்ய முடிகிறது. இதனால் பொதுமக்களுக்கும் நியாய விலை கடை பணியாளர்களுக்கும் மோதல் போக்கு ஏற்படுவது உடன் பணியாளர்கள் புகார்களுக்கு உள்ளாகும் நிலையும் உருவாகிறது.
இதனை களையும் பொருட்டு புளூ டூத் மூலம் விற்பனை மேற்கொள்வதை முற்றிலும் நீக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அல்லது காலதாமதம் ஏற்படாத வகையில் எளிமைப்படுத்தப்பட வேண்டும். நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து முதன்மை சங்கங்களுக்கு நகர்வு செய்யப்படும் பொருட்களில் அரிசி 2 கிலோ முதல் 5 கிலோ வரையிலும் மற்றும் சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை ஆகிய பொருட்கள் ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வரையிலும் எடை குறைவாக வழங்கப்படுகிறது. இதை சரி செய்து எடை சரியான அளவில் வழங்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும்.
விற்பனையாளரும் சங்கத்தின் சிற்றெழுத்தரும் ஒரே பணி நிலையில் உள்ளதால் பதவி உயர்வில் எழுத்த பணியிடம் அனுமதிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் முடிவுற்று பின் அனைவரும் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கி முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர்கள் கோவிந்தன், முருகேசன், மாவட்ட இணைச்செயலாளர்கள் சந்திரசேகர், பாலமுருகன், போராட்டக் குழு தலைவர் சசிகுமார், போராட்டக் குழு செயலாளர் முருகேசன், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.