கன்னியாகுமரி, ஜூன் 20 –
குமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு முதல் மண்டைக்காடு வரையான ஏவிஎம் சானல் இன்னொரு கூவமாக மாறிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இரையுமன்துறை முதல் நீரோடி வரையான ஏவிஎம் சானலை அழிவிலிருந்து மீட்டெடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அவர் அனுப்பியுள்ள அவசர மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: குமரி மாவட்டத்தின் இயற்கை எழிலுக்கும் கடற்கரை மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும் விவசாய நீர்நிலைக்கும் ஆதாரமாக இருந்தது ஏவிஎம் சானல். அது சமீப காலமாக தன் அடையாளத்தை இழந்து அழகை இழந்து குமரி மாவட்டத்தின் கூவமாக மாறிக்கொண்டிருக்கிறது. தேங்காப்பட்டணம் முதல் மண்டைக்காடு வரையான ஏவிஎம் சானல் பல நில மாபியாக்களாலும் ஆக்கிரமிப்புகளாலும் காணால் போய்விட்டது. ஏவிஎம் சானல் நிலங்களை தனியார் பட்டா நிலங்களாக மாற்றி அப்பாவி மக்களிடம் விற்பனை செய்தது. அரசின் மணல் ஆலை நிறுவனம் அதை பல இடங்களில் தடுத்து மணல் அகழ்வு செய்ததும் கனிமங்கள் நிறைந்த கழிவு மணல்களைக் கொட்டியதும் ஏவிஎம் சானல் அழிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த அனைத்து அழிவுகளிலிருந்தும் தப்பி நின்ற தேங்காப்பட்டணம் முதல் நீரோடி வரையான ஏவிஎம் சானல் சமீப காலமாக அழிவை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இப்பகுதியிலுள்ள கடலோர மக்களும் பிற சமூக மக்களும் இந்த ஏவிஎம் சானலை தங்கள் வாழ்வாதாரமாக பயன்படுத்திவந்தனர். மீனவர்கள் தங்கள் படகுகளை ஓட்டிவந்து தங்கள் ஊரிலேயே ஏற்றி வைத்தனர். விவசாய நிலங்களின் நீராதாரம் பாதுகாக்கப்பட்டது; விவசாயம் செழித்தது. ஆனால் இப்போது மக்களின் எந்த அடிப்படை வாழ்வாதாரமும் நிறைவேறாத அளவிற்கு சானல் சீரழிந்துள்ளது. அது குமரி மாவட்டத்தின் இன்னொரு கூவமாக மாறி சுற்றுச்சூழலை பாதித்துக்கொண்டிருக்கிறது. கூவமாக மாறிக்கொண்டிருக்கும் ஏவிஎம் சானலை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். பலகட்ட போராட்டங்களை நடத்தினர். எட்டு ஊர்களும் தாங்களே நிதி திரட்டி சானலை தூர்வாரும் பணிகளைச் செய்தனர். ஆனால் அரசிடமிருந்து எந்தவித நிதியும் இதுவரை கிடைக்கவில்லை. ஆய்வுசெய்கிறோம் என்று சொல்லி காலத்தைக் கடத்துகின்றனர். எனவே இரையுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி வரையான ஒன்பது கி.மீ. ஏவிஎம் சானல் பகுதியைத் தூர்வாரி இருப்பக்க கரைகளைப் பலப்படுத்தி சானலை மீட்டெடுக்க போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வேண்டுகிறோம். இது அவசரமாக நிறைவேற்ற வேண்டிய திட்டம் என்பதை முதலமைச்சர் ஏற்பீர்கள் என்று நம்புகிறோம் என்று அம்மனுவில் குறும்பனை பெர்லின் வேண்டுகோள் வைத்துள்ளார்.