ராமநாதபுரம், ஜூன் 5- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சி பொக்கனாரேந்தல் ஸ்ரீ மலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோயில் 59 ஆம் ஆண்டு சமத்துவ எருதுகட்டு விழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பொங்கலிட்டு கோயில் காளைகளுக்கு வழிபாடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து
கோயில் காளைக்கு மரியாதை செலுத்தி எருதுகட்டு விழாவை ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் கலந்து கொண்டன. பங்கேற்ற காளைகளின் திமில் பிடித்து அடக்கிய காளையர், போக்கு காட்டி அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கு கோயில், விழா கமிட்டி,
கிராம மக்கள் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் புல்லாணி, மேற்கு ஒன்றிய திமுக தலைவர் உதயக்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிரேமா சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர். தாதனேந்தல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோகிலா ராஜேந்திரன் தலைமையில் கிராம மக்கள் ஏற்பாடு செய்தனர்.



