திருப்பூர் மே:14
செட்டிபாளையம் பகுதியில் உள்ள தேவா மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பழைய இரும்பு வியாபாரம் செய்பவரின் மகன் ருத்ரமூர்த்தி பிளஸ் டூ தேர்வில் 598 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து மருத்துவராகுவதே லட்சியம் என கூறினார்.
பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது இதில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் , கரட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்.
பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.இவரது மகன் ருத்ரமூர்த்தி கே.செட்டிபாளையம் பகுதியில் உள்ள தேவா மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
தமிழகம் முழுவதும் வெளியான பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகளில் ருத்ரமூர்த்தி 598 மதிப்பெண்கள் பெற்று மாநில மற்றும் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். தமிழ்,ஆங்கிலம் பாடத்தில் 99 மதிப்பெண்களும் இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணக்கு ஆகிய பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவன் ருத்ரமூர்த்திக்கு பள்ளி சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டதோடு பள்ளி தலைமை ஆசிரியர் ஷர்மிளா மாணவனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவனுக்கு கேக் வெட்டி ஊட்டினர்.
இது குறித்து மாணவன் கூறுகையில்,
மதிப்பெண்கள் பெறுவதற்கு பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் துணை நின்றதாகவும் அடுத்த கட்டமாக மருத்துவம் படிக்க விருப்பம் உள்ளதாகவும் சமீபத்தில் நடந்த நீட் தேர்வு எழுதி உள்ளதாகவும் அதன் முடிவு வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மாணவனின் பெற்றோர் கூறுகையில்,
எனது மகன் அதிக மதிப்பெண்கள் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பள்ளி நிர்வாகம் செய்து கொடுத்துள்ளனர் குறிப்பாக ஆரம்ப காலத்தில் எங்களது வறுமை நிலையை கருத்தில் கொண்டு எனது மகனுக்கு கட்டணமே வாங்காமல் கல்வி கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். எனவே பள்ளி நிர்வாகத்திற்கு எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.