நாகர்கோவில் மே 7
கடலும் கடற்கரையும் யாருக்கானது பொன்னாரே? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு நெய்தல் குறித்த பொன்னார் பேச்சுக்கு நெற்றியடி கொடுத்து குறும்பனை பெர்லின் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
“கடல் மீனவனுக்குச் சொந்தமானது அல்ல; எனக்குத்தான் சொந்தம் என மீனவர்கள் அடம்பிடிக்க முடியாது. கடல் நாட்டுக்குத்தான் சொந்தம்”
என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்ன முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கடலோடியின் எளிய கேள்விகள்.
நாடு வேறு மக்கள் வேறா? மக்களின் கூட்டமைப்புதானே நாடும் அரசும். ஆக்கப்பட்ட பொருள் அனைத்தும் அரசாங்கத்திற்குச் சொந்தம் என்றாலும் கடல் ஆக்கப்பட்ட பொருள் இல்லையென்றாலும் நாடு என்ற கட்டமைப்பும் அரசு என்ற அமைப்பு முறையும் வருவதற்கு முன்பே கடல்தோன்றிய காலம் தொட்டே கடலையும் கடல் வளத்தையும் நம்பி வாழும் பூர்வீகக் குடிமக்களான கடலோடிகளுக்கே கடலும் கடற்கரையும் சொந்தம் என்ற புரிதல் கூடவா உங்களுக்கு இல்லை பொன்னாரே!
வரலாறுகளை முதலில் பதிவுசெய்த சங்க இலக்கியகளிலும் ஆவணங்களிலும் கடலும் கடற்கரையும் கடலாண்ட மன்னர்களான கடலோடிகளுக்கே சொந்தம் என சொல்லப்பட்டிருக்கிறதே அதைப் படிக்கவில்லையா?
நாடு என்று ஒன்று உருவாவதற்கு முன்பே திரைகடல் ஓடி திரவியம் தேடியதும் கடல்வழி பயணித்து நாடு பல கண்டதும் நாகரீகம் வளர்த்ததும் கடலோடிகள்தான் என்பது முன்னாள் அமைச்சருக்குத் தெரியாதா?
அண்டைநாட்டு தாக்குதல்கள், பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள், தீவிரவாத அச்சுறுத்தல்கள் அனைத்தையும் முன்களம் நின்று எதிர்கொள்ளும் சம்பளம் வாங்காத ராணுவமான கடலோடிகள் இந்த நாட்டின் மக்களா இல்லை எங்கிருந்தோ வந்த அகதிகளா?
இந்த நாட்டின் நலனுக்காக தங்கள் குடியிருப்புகளையும் வழிபாட்டுத்தலங்களையும் தொழில் கட்டமைப்புகளையும் தியாகம் செய்து வளப்படுத்திய வரலாறுகள் தாங்கள் அறியாததா?
கடலில் கால்நனைப்பதை தீட்டு என்று ஒதுக்கியதும் நாற்றமடிக்கும் அனைத்தும் தீண்டத்தகாதவை என்று ஒதுக்கிய சித்தாந்தம் கொண்டவர்கள் இன்று கடலை ஆக்கிரமித்து கடலோடிகளை வெளியேற்றத் துடிப்பதன் காரணம் என்ன்?
கடலோடிகளின் மீன்பிடிப்பு தங்குதளங்களாக உருவாக்கப்பட்ட மீன்பிடித்துறைமுகங்களை தனியாருக்குத் தாரைவார்த்து, இப்போது அத்துறைமுகங்கள் வழியாக போதைப்பொருள் கடத்தல்தொழில் செய்யும் கார்ப்பரேட் நிலைபாட்டை உருவாக்கியது யார்?
1991-ல் கொண்டுவரப்பட்ட கடலோர மண்டல ஒழுங்குமுறைச் சட்டம் (CRZ) கடலுக்கும் கடற்கரை மக்களுக்கும் எவ்வித இடையூறும் செய்யமுடியாத முறையில் வெளியிலிருந்து வரும் வளர்ச்சித் திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்காக கொண்டுவரப்பட்டது என்பது அமைச்சராக இருந்த தங்களுக்குத் தெரியாத விடயமல்லவே!
கடல்படைக்கு 48 மீனவ கிராமங்களும் தேவை என்றால் அதை விட்டுத்தரவேண்டுமா என்று நீங்களே கேட்கிறீர்கள், நாங்கள் கேட்டால் தேசத்துரோகி என்கிறீர்களே நியாயமா?
கன்னியாகுமரியிலுள்ள 48 மீனவ கிராமங்களும் அழிந்தாலும் பரவாயில்லை, கடற்படை வேண்டாம் என்று சொல்ல முடியுமா? என்று கேட்கிறீர்களே! கன்னியாகுமரியிலுள்ள 48 மீனவ கிராமங்களையும் அழித்துவிட்டு அதானிக்கு 29000 கோடியில் கொண்டுவர திட்டமிட்ட சர்வதேச சரக்குப்பெட்டக துறைமுகமும் கப்பற்படை தளமும் இதற்காகத் தான் கொண்டுவரப்பட்டதோ?
ஒரு வீடுகூட போகாது; ஒரு துண்டு நிலம்கூட போகாது என்று கூறிவிட்டு மக்கள் வாழ்ந்த 600 ச.கி.மீ பகுதியை சரக்குப்பெட்டக துறைமுகத்திற்கு எடுக்க செய்த சதியை மாவட்ட மக்களைத் திரட்டி இரண்டு ஆண்டுகளாக தொடர்போராட்டம் நடத்திய கடலோடிகளின் சக்தி நீங்கள் அறியாததா?
இனயம் சர்வதேச சரக்குப்பெட்டக மாற்றுமுனைய திட்டம் வந்த அதேநேரம் சீர்காழி பகுதியில் 15 கடலோர கிராமங்களை அழித்து கொண்டுவரப்பட்ட சரக்குப்பெட்டக மாற்று முனையத்தால் என்ன வளர்ச்சி வந்தது என்று சொல்வீர்களா?
சுமார் 8000 கோடி செலவில் கொண்டுவரப்பட்ட விழிஞ்ஞம் சர்வதேச சரக்குப்பெட்டக மாற்றுமுனையத்தில் வெறும் 575 கோடி முதலீடு செய்த அதானிக்கு 40 ஆண்டுகள் லாபம் பெற கொடுத்தீர்களே! இதனால் நாட்டுக்கும் கேரளாவிற்கும் என்ன வளர்ச்சியைக் கொண்டுவந்தீர்கள் என்று சொல்ல முடியுமா?
விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு கொழும்புத் துறைமுகத்திலிருந்து ஒரு சரக்குக் கப்பலையாவது ஈர்க்க முடிந்ததா?
சீனா வந்து 48 மீனவ கிராமங்களையும் அடிக்கும் என்கிறீர்களே! அந்த சீனாவின் முதலீட்டில் இலங்கை கம்பந்தோட்டாவில் அமைக்கப்பட்ட துறைமுகத்திற்கு வலியச் சென்று இந்தியா நிதி ஒதுக்கியதே எதற்கு குமரி மாவட்ட 48 மீனவ கிராமங்களையும் சீனா அடிக்கத்தானோ? யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்?
28000 கோடி ரூபாயில் மோடி தந்த அமிர்த கலசத்தை திமுக- காங்கிரஸ் – மதவாதிகள் தடுத்து நிறுத்தியதால் இளைஞர்கள் வேறு மாவட்டங்களுக்கு வேலை தேடிச் செல்கிறார்கள் என்று கவலைப்படும் பொன்னாரே! தென்னிந்திய மக்களிடமிருந்து வரியைப் பிடுங்கி வடமாநிலங்களுக்கு மோடி கொடுத்த அமிர்த கலசத்தில் பருக முடியாமலா தென்னிந்திய மாநிலங்களுக்கு வடமாநில இளைஞர்கள் வருகிறார்கள்?
இயற்கையாகவே மக்கள் வாழும் பகுதி மக்கள் வாழ்வதற்கு தொழிற்சாலை அமைக்கும் பகுதி தொழிற்சாலைக்கு என்ற புரிதல் கூட இல்லாமல் மக்கள்வாழும் பகுதிகளை சரக்குப்பெட்டகங்களை அடுக்கி வைக்கவும் கந்தக பூமியாக மாற்றவும் எண்ணெய் எரிவாயு எடுக்கவும் பாலைவனமாக்கவும் துடிப்பதன் நோக்கம்தான் என்ன?
ஆடு வளர்க்கப் போதுமான இடத்தில் ஆனை வளர்க்கலாமா?
மீன்கள் உற்பத்தியாகும் பாருகளையும் பாறைகளையும் மலைகளையும் குன்றுகளையும் தாவரங்களையும் காடுகளையும் படுகைக்கரைகளையும் அழித்து 2000 அடி ஆழத்திற்கு ராட்சச போர்களைப் போட்டு சிதைத்து படுபயங்கர சத்தத்துடன் அதிர்வுகளை ஏற்படுத்தி குமரி தெற்குக்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எண்ணெய் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடல் வளமும் சுற்றுச்சூழலும் முற்றிலுமாக பாதிப்புக்கு உள்ளாகும் என்ற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லிதவரா தாங்கள்?
குறிஞ்சி நிலம் மலைவாழ் பூர்வீகக் குடிகளுக்கு எப்படி சொந்தமானதோ, முல்லை நிலம் எப்படி காடுகளில்வாழும் பூர்வீகக் குடிகளுக்குச் சொந்தமோ, மருத நிலம் எப்படி விவசாயக் குடிகளுக்குச் சொந்தமோ அதுபோல நெய்தல் நிலம் கடலோடிகளான மீனவர்களுக்குச் சொந்தம் என்ற புரிதல் கூட இல்லாமல் நாடுவேறு மக்கள் வேறு என்றுபேசுவது ஏன்?
வளர்ச்சி என்பது நாட்டு மக்களுக்கானதாக இருக்க வேண்டும். மாறாக மக்களை அழித்துவிட்டு கார்ப்பரேட்டுகளுக்கு வளம்காண வழிவகுப்பது நல்ல நல்ல ஆட்சிக்கு அழகா?
ONGC க்கு கொடுக்கப்பட்ட எரிவாயு எண்ணெய் எடுக்கும் அனுமதி அப்படியே அதானிக்கும் அகர்வாலுக்கும் திருப்பி விடப்படும் என்ற தனியார் மயமாக்கல் மக்களுக்குத் தெரியாதா என்ன?
மிகத் துணிச்சலாக கன்னியாகுமரி மாவட்டத்தின் 48 கடற்கரை கிராமங்களையும் அழிக்கச் சொல்லும் முன்னாள் அமைச்சர் பொன்னாரே இந்த சாமானியனின் கேள்விக்கு இதய சுத்தியோடு பதில் சொல்லுங்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



