ஆண்டிபட்டி அருகே அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் நேற்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் அண்ணா கூட்டுறவு நூற்பாலை கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலையில் தற்போது நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஒப்பந்த பணியாளர்கள் என சுமார் 350 பேர் பணியாற்றி வருகின்றனர். அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் பருத்தி பஞ்சில் இருந்து நூல் கண்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அண்ணா நூற்பாலையில் நேற்று தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு மேற்கொண்டார். ஆலையில் நூல் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் நேரில் பார்த்து ஆய்வு செய்தார். அதன்பின்னர் அலுவலகத்தில் அமர்ந்து ஆலை நிர்வாகிகளிடம், தொழிலாளர்கள் நலன் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், ஜவுளித் துறை இயக்குநர் லலிதா, தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார், ஆண்டிபட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமான அரசு அதிகாரிகள், திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.