நாகர்கோவில், மே 2:
திமுக இளைஞரணி மாநில செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை குமரி வருகிறார்.
சென்னையில் இருந்து விமான மூலம் புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு மாலை 3:30 மணிக்கு வரும் துணை முதல்வர் அங்கிருந்து கார் மூலம் மாலை 5 மணிக்கு நாகர்கோவில் தேரேகால் புதூரில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடக்கிற திமுக மாநில மீனவர் அணி செயலாளர் ஏ. ஜோசப் ஸ்டாலின் இல்ல திருமண விழாவில் பங்கேற்கிறார்.
விழாவில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொள்கின்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் துணை முதல்வர், விமானம் சென்னை செல்கிறார்.
இது தொடர்பாக மேயர் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குமரிக்கு வரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று மாலை 4 மணிக்கு காவல்கிணறு சந்திப்பில் எனது தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. எனவே தமிழ்நாடு துணை முதலமைச்சரை வரவேற்கும் நிகழ்விலும், திருமண வரவேற்பு நிகழ்விலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட ,மாநகர, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.