நாகர்கோவில் மே 24
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர் வடிந்து செல்ல இடமில்லாமல் குளம் போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல தேங்கி நிற்கும் தண்ணீரில் நடந்து செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் சாலையில் இருந்து நேசமணி நகருக்கு செல்லும் 1வது பிரதான சாலையில் சுமார் 200 மீட்டருக்கு மேல் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இவ் வழியாகத்தான் நேசமணி நகர், சைமன் நகர் மற்றும் கோணம் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி, வேலைவாய்ப்பு அலுவலகம், மற்றும் பல்வேறு அரசு அலுவலகம், தொழில் பேட்டை, மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குடியிருப்பு போன்றவற்றிற்கு செல்லும் எளிதான வழியாகும். தற்போது கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரிக்கும், கலைக் கல்லூரிக்கும் செல்லும் மாணவ மாணவியர் இச்சாலை வழியாக முட்டளவு தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் தவறாக புரிந்து கொண்டு சாலைகளில் மழைநீர் சேகரிப்பை நடைமுறைப்படுத்தி வருகிறது என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு.
நாகர்கோவில் மாநகராட்சி சாலை பணி நடைபெறும் போதும், செப்பனிடும் போதும் முறையான திட்டமிடுதல் இல்லாமலும் திறன்மிக்க பொறியாளர்களைக் கொண்டு சாலைகளின் தன்மைகளை ஆராயாமல் கடமைக்காக பணியாற்றும் அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு சாலை பணி நடைபெற்றதால் தற்போது மாநகராட்சி சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும், இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நடவடிக்கை எடுப்பாரா நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.