மயிலாடுதுறை பிப். 8
மயிலாடுதுறை வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் பூ வியாபாரிகள் சங்கம் சார்பில் பால்குட விழா.
மயிலாடுதுறை வண்டிக்காரத்தெருவில் பிரசித்திபெற்ற பிரசன்னமாரியம்மன்கோயில் உள்ளது. இக்கோயில் ஆண்டுதோறும் தை கடைவெள்ளியின் போது பூ வியாபாரிகள் சார்பில் பால்குடம். அலகுகாவடி எடுப்பது வழக்கம். அந்த வகையில் தைமாத கடைவெள்ளியை முன்னிட்டு 41-வது ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. காவிரி துலாக்கட்டத்தில் இருந்து பக்தர்கள் அலகுகாவடி, 108 பால்குடம் எடுத்து பச்சைகாளி, பவளகாளி கருப்பணசாமி வேடம் அணிந்து நடனத்துடன் பம்பை, உடுக்கை, உருமி மேளதாள வாத்தியங்கள் முழங்க கடைவீதிகளின் வழியாக ஆலயம் வந்தடைந்தனர். ஆலயத்தின் முன்பு பக்தி பரவசத்தின் உச்சமாக பால்குடம் எடுத்தவர்கள், அலகுகாவடி குத்தியவர்கள் நடனமாடி ஆலயத்தின் உள்ளே சென்றது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. முக்கிய வீதிகள் வழியாக கோயிலை சென்றடைந்தனர். தொடர்ந்து மாரியம்மனுக்கு பால்குட அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் மகாதீபாராதனை செய்யப்பட்டது. இதில் வீச்சருவாள் ஏந்திய கருப்பண்ணசாமி வேடமணிந்தவர் ஆடிய ஆக்ரோஷமான நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.