திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை . ஐன.24
வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டி பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாயில் சாக்கடை கழிவுகள் தேங்கி நிற்பதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் .. வீணடிக்கப்பட்ட ரூ 10 லட்சம் அரசு நிதி … .
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 15 வது வார்டில் உள்ள சுப்பிரமணியபுரம், கொன்னம்பட்டி கிராமங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமங்களில் கடந்த வருடம் சேவுகம்பட்டி பேரூராட்சி நிதியிலிருந்து ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டது. இந்த கழிவு நீர் கால்வாயில் சாக்கடை நீர் வெளியே செல்வதற்கு வழியின்றி கால்வாய் கட்டப்பட்டுள்ளதால் கடந்த 6 மாதமாக தேங்கி உள்ளது. வீடுகள் முன்பு கழிவு நீர் தேங்கி உள்ளதால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தெருவில் வசிக்கும் குழந்தைகளும், பெரியோர்களும் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் மூன்று மின்கம்பங்களை அகற்றாமல் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளதால் அடிக்கடி மின் தடையும் ஏற்படுகிறது.
மின் கம்பங்கள் கழிவு நீர் கால்வாய்க்குள் இருப்பதால் பொதுமக்களை மின்சாரம் தாக்கும் அபாயமும் உள்ளதால் இந்த பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
இது குறித்து சேவுகம்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் கூறினர்.
மேலும் ரூ 10 லட்சம் நிதியில் அரைகுறையாக கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாயில் சாக்கடை நீர் கடந்த 6 மாதங்களாக தேங்கி நிற்பதால் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கூறினர்.