மார்த்தாண்டம், டிச- 27.
மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அனிஷ் (26) இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். மனைவியின் தங்கையை வள்ளியூரை சேர்ந்த சூர்யா (23) என்பவர் திருமணம் செய்து உள்ளார். சூர்யா தற்போது ஞாறான் விளை சந்திப்பில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சூரியா தினமும் மது அருந்திவிட்டு வந்து அவரது மனைவியை அடித்து உதைப்பது வழக்கமாம். இது தொடர்பாக அனீஷ் சம்பவ தினம் சூர்யாவின் சலூன் கடைக்கு சென்று ஏன் உன் மனைவியை அடிக்கிறாய்? என தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சூர்யா சலூன் கடையில் வைத்திருந்த பிளேடை எடுத்து திடீரென அனீஷின் இடது கையில் கீறி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அனிஷ் அங்கிருந்து தப்பி சென்றார்.
பின்னர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கையில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளது. அனிஷ் அளித்த புகாரின் பேரில் சூர்யா மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.