மதுரை டிசம்பர் 23,
மதுரையில் ஆட்சி மொழிச்சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி
மதுரை, தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் அரசு நிருவாக முழுமையாகத் தமிழில் மேற்கொள்ளப்பெற வேண்டும் என்ற சீரிய நோக்கில் 27.12.1955 சட்டமன்றத்தில் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சிமொழிச் சட்டவாரம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 18-12-2024 முதல் 27-12-2024 வரை ஆட்சிமொழிச்சட்ட வாரம் கொண்டாடப் பெற்று வருகின்றது. இதன் மூன்றாம் நாள் நிகழ்வாக 20.12.2024 அன்று வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி காலை 10.00 மணியளவில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திலிருந்து மதுரை மாநகராட்சி அலுவலகம், தமுக்கம் வழியாக சங்கத் தமிழ் காட்சிக் கூடம் வரை நடைபெற்றது.
இப்பேரணியை மதுரை தொழிலாளர் இணை ஆணையர் பெ.சுப்பிரமணியன் தலைமை ஏற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் ம.சுசிலா வரவேற்புரை நிகழ்த்தினார். தொழிலாளர் இணை ஆணையர் தமிழின் பெருமை, வளமை, தொன்மை குறித்தும் ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் “என்ற திருக்குறளின் மூலம் அகிம்சையை உலகுக்குச் சொன்னவர் திருவள்ளுவர் என்றும் திருக்குறளின் பெருமையை மகாத்மா காந்தியடிகளுக்கு எடுத்துரைத்தவர் ரஷ்யா எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் தான் என்ற கருத்தையும் மாணவர்களுக்கு எடுத்தியம்பினார். இப்பேரணியில் மதுரை மு.சா.ச.வக்பு வாரியக் கல்லூரி மாணவர்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பயிற்சி பயிலும் மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் பங்கேற்றனர். மதுரை அரசு இசைக் கல்லூரி மாணவர்கள் தமிழ்நாட்டின் பாராம்பரியக் கலைகளான கரகாட்டம், தப்பாட்டம் ஆகியவற்றை ஆடிச் சிறப்பித்தனர்.
மேலும் இப்பேரணியில் அரசுப் பணியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். பேரணிக்கான முன்னேற்பாட்டுப்பணிகளை மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் ம.சுசிலா மேற்கொண்டிருந்தார்.