டிச. 6
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஃபெஞ்சம் புயல் வெள்ள நிவாரணப்பொருட்களை விழுப்புரம் மாவட்டத்திற்கு கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார்கள்.
தமிழ்நாட்டில் ஃபெஞ்சம் புயல் காரணமாக அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கடுமையான அளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்திலிருந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஃபெஞ்சம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிடும் வகையில் 3 வாகனங்களில் 5 கிலோ அரிசி பைகள், சர்க்கரை 1 கிலோ, பருப்பு 500 கிராம், ரவை 500 கிராம், கோதுமை 500 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் பொடி 100 கிராம், சாம்பார் பொடி 100 கிராம், ரசப்பொடி 100 கிராம், டீ தூள் 100 கிராம் 1 வாகனத்திற்கு 500 பாக்ஸ்கள் என 3 வாகனத்தில் 1,500 பாக்ஸ்கள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து கொடியசைத்து விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், காங்கேயம் வட்டாட்சியர் மோகன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.