தருமபுரியில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தருமபுரி மாவட்ட விவசாயிகள் தண்ணீர் உரிமை கோரிக்கை மாநாடு வன்னியர் திருமண மண்டபத்தில் எம். பாண்டியன் மாநில பொருளாளர் தலைமையில் நடைபெற்றது. சக்திவேல் மாவட்ட செயலாளர், குப்புசாமி மாவட்டச் செயலாளர்,பழனி மாவட்ட பொருளாளர், அண்ணாமலை மாவட்டத் துணைத் தலைவர், வெங்கடேசன் மாவட்ட இளைஞரணி தலைவர் ஆகியோர் முன்னிலைவகித்தனர். சுந்தரம் மாநில பொதுச் செயலாளர் ,ஆறுமுகம் மாநிலத் துணை தலைவர், சின்னசாமி மாநிலச் செயலாளர், செந்தில்குமார் மாநிலத் துணைத் தலைவர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். எஸ். ஏ. சின்னசாமி மாநிலத் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கடந்த 10 ஆண்டு காலமாக காவிரி ஒகேனக்கல்லில் உபரி நீராக செல்லும் தண்ணீரை மோட்டார் பம்பு மூலம் தருமபுரி மாவட்ட அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் நிரப்பும் திட்டம் தமிழக விவசாயிகள் சங்கம், அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகள் மூலம் கோரிக்கை வைத்தும்,வலியுறுத்தப்பட்டும் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு இதுவரை ஏமாற்றமே பரிசாக அளிக்கப்பட்டு வருகிறது. நதிகள் இணைப்பு குறித்து பேசி வரும் மத்திய அரசும் தமிழகத்தில் தண்ணீர் கிடைக்க எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றது. ஏரிகள் தூர்வாரப்பட்டு தண்ணீர் தேக்கி நிலத்தடி நீர் உயர வழிவகுக்கும் குடி மராமத்து திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணையில் இருந்து நீரேற்றி மொரப்பூர், கடத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களை சார்ந்த 38 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் அரசாணை பிறப்பிக்கப்பட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. உடனடியாக தமிழக அரசு தண்ணீருக்காக ஏங்கும் தருமபுரி மாவட்ட விவசாயிகளை காத்திட போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்று மாநாடு மூலம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் விவசாய சங்க மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.



