திருச்செந்தூர் கோவிலில் கனிமொழி எம்.பி., ஆய்வு :-
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகளை கனிமொழி எம்.பி., ஆய்வு செய்தார்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா அடுத்த மாதம் நவம்பர் 2ம்தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தங்குவதற்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட கூடாரம், கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறவுள்ள இடங்கள், பேருந்து நிலையம், பொதுமக்களுக்குத் தேவையான தண்ணீர் வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதி ஏற்பாடுகளை கனிமொழி எம்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் ஸ்ரீனிவாசன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.