சென்னை அக் 22
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “திருமாவளவன் என்னை ஆர்எஸ்எஸ்காரன் என்றிருக்கிறார்.ஆர்எஸ்எஸ்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சி, சமுதாய ஒற்றுமை, அனைத்து சமுதாயத்தைச் சார்ந்து அனைத்து மக்களும் முன்னேற வேண்டும் என்கிற உயரிய கொள்கையோடு இருக்கும் இயக்கம் ஆர்எஸ்எஸ். இட ஒதுக்கீட்டில் என்னுடைய பங்கு என்ன என திருமாவளவன் கேட்டிருக்கிறார். 2009ஆம் ஆண்டு அருந்ததியின இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டபோது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக சார்பில் கலந்து கொண்ட அப்போதைய துணை தலைவர் சுபநாகராஜன் அறிக்கை ஒன்றை கொடுத்திருந்தார்.அந்த அறிக்கையில், அருந்ததியின மக்களுக்கு இட ஒதுக்கீடு ஏன் வேண்டும் என ஒரு விவரம் இணைக்கப்பட்டது. அந்த விவரத்தையும் இளம் வழக்கறிஞராக இருந்தபோது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக நான்தான் எடுத்துக் கொடுத்தேன். உச்ச நீதிமன்றத்தில் சிறந்த தீர்ப்பை பெற்றதற்கு காரணம் எங்களது சட்ட ரீதியான போராட்டம் தான். திருமாவளவன் சொல்லியது போல சுலபமாக இந்த தீர்ப்பு கிடைக்கவில்லை.
ஹைதராபாத் தேர்தலின் போது பிரதமர் மோடி அருந்ததியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தருவதில் பெரிய அண்ணனாக இருந்து செயல்படுத்துவேன் என்று உறுதியளித்தார். இப்போது அதனை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். சமுதாயத்தில் கடைநிலையில் உள்ள மக்களுக்கும் அரசியல் அதிகாரம் வரவேண்டும் என்பதுதான்அந்தியோதையா கொள்கை.
சமுதாயத்தில் அடித்தட்டு மக்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அனைத்து அடித்தட்டு மக்களுக்கும் இட ஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என பாஜக வலியுறுத்துகிறது. அதுமட்டும் அல்லாது, பாஜக ஒவ்வொரு கீழ்நிலையில் உள்ளவரையும் அதிகாரத்திற்கு வரவேண்டும். அவர்களுக்கு அனைத்தும் கிடைக்க வேண்டும் என கொள்கையோடு இருக்கிறோம்.
ஒண்டிவீரனின் நினைவு தினத்தை அனைத்து கட்சியினரும் அனுசரிக்கின்றனர். மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி அவரது 251வது நினைவு தினத்தில் தபால் தலையை வெளியிட்டார். என்றாவது ஒருநாள் திருமாவளவன், ஒண்டிவீரனின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி இருக்கிறாரா?மக்கள் நல கூட்டணியில் 25 இடங்களை திருமாவளவன் வாங்கினார். அதில் ஒரு இடத்தையாவது அருந்ததியினர் அல்லது தேவேந்திர சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுத்திருக்கிறாரா? கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 இடங்கள் பெற்ற திருமாவளவன், அதில் ஏதாவது ஒரு இடத்தையாவது அருந்ததியின சமுதாயத்திற்குக் கொடுத்திருக்கிறாரா? இவருக்கு இட ஒதுக்கீட்டை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?
திருமாவளவன் பிரிவினை வாதத்தை ஆதரித்தும், சனாதனத்தை எதிர்த்தும் பேசுகிறார். சனாதனம், ஆன்மீகம், தேசியத்தை ஆதரிப்பவர்கள் பாஜகவினர். அருந்ததியின மக்கள் இட ஒதுக்கீடை பற்றி பேச துளியும் தகுதியற்றவர் திருமாவளவன்.அருந்ததியின சமூகத்தின் இட ஒதுக்கீடு சம்பந்தமாக கடந்த 12 ஆண்டுகளாக என்னுடைய பங்கு என்னவென்று சமுதாயத்திற்கு தெரியும். நான் ஆர்எஸ்எஸ் சங்கி என்பதில் பெருமைகொள்கிறேன்” என்று தெரிவித்தார்.