வெண்துளிர் என்ற தலைப்பில் அறிமுக நிகழ்ச்சி நடந்தது
தஞ்சாவூா், அக்.15
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கின. வகுப்புக ளுக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளை கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், துறை பேராசிரியர், டாக்டர்கள், மூத்த மாணவர்கள் என அனைவரும் வரவேற்றனர்.
தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளின் அறிமுக நிகழ்ச்சி வெண்துளிர் 24 என்ற தலைப்பில் நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மருத்துவ மனை கண்காணிப்பாளர் டாக்டர் ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் பேசியதாவது:-
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவ- மாணவிகளுக்கு முதலில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தஞ்சை மருத்துவக் கல்லூரி தமிழகத்தில் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக திகழ்கிறது. தலைசிறந்த பேராசிரியர்கள், டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர் . மாணவர்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.
தங்களது பிள்ளைகளை விடுதியில் சேர்த்து விட்டோம். இனி பட்டமளிப்பு விழாவில் பார்த்துக் கொள்ளலாம் என பெற்றோர்கள் ஒருபோதும் நினைக்கக் கூடாது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்களது பிள்ளைகளை பார்த்து பல விஷயங்களை அவர்களிடம் கேட்டு அறியுங்கள். ஆனால் தங்களது பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள், விடுதி வசதி எப்படி உள்ளது என எங்களிடம் கேளுங் கள் . மாணவர்களுக்கு ஒழுக்கம் மிக முக்கியம். நன்றாக படிக்கிறார் கள் என எண்ணி விலை உயர்ந்த செல்போன், மோட்டார் சைக்கிள் தயவு செய்து வாங்கி கொடுத்து விடாதீர்கள். மாணவர்கள் இட்டப்பட்டு கஷ்டப்பட்டு படித்தால் டாக்டர் ஆகிவிடலாம் . டாக்டர் பணிக்கு ஒருபோதும் ஓய்வு கிடையாது. எனவே நன்றாக படித்து தலை சிறந்த டாக்டர்களாக ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து மாணவ- மாணவிகள் மருத்துவக் கோட் அணிந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு மாணவர்களாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி டாக்டர்கள் சுமதி, சுதா, தமிழ்மணி, ஜெகதீசன், ஜோஸ்வின் பிரியா, சாந்தி, வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.