கோவை செப்:14
கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியம், பெள்ளாதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளிகளின் வீடுகளை நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்கள் செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளிடம் இத்திட்டத்தின் பயன் குறித்து கலந்துரையாடினார்.
நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
பொதுமக்களிடம் அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நிறைந்தது மனம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசுத்துறையான ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் பயனடைந்த பயனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டது.
ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் கிராம சாலை மேம்பாட்டு, ஜல்ஜீவன் திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஊரக பகுதி மக்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். அதனைத்தொடர்ந்து, “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதாவது, ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி, குடிசையில் வசிப்பவர்கள், சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், பட்டா இருந்தும் சொந்தமாக வீடு இல்லாதவர்கள் என ஏழை, எளிய மக்களை கண்டறிந்து அவர்களுக்கு ஊரக வளர்ச்சி முகாமின் மூலமாக பாதுகாப்பான வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு வீடும் 360 சதுர அடி பரப்பளவில், அறை, சமையலறை, கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்படுகின்றது. இதற்கு அரசின் சார்பில் ரூ.3.50 இலட்சம் வழங்கப்படுகின்றது. மேலும், ஒரு சிலர் தங்களது வீடுகளில் கூடுதல் வசதிகள் செய்ய விரும்பினால் ரூ.1.50 இலட்சம் வரை கடனுதவிகள் வங்கிகள் வாயிலாக வழங்கப்படுகின்றது.
அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் 1445 வீடுகள் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டு வேலை உத்தரவு வழங்கி பணிகள் நடைபெற்று வருகின்றது. காரமடை வட்டாரத்தில் மட்டும் 435 பயனாளிகள் இத்திட்டம் மூலம் பயன் பெறவுள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் பெள்ளாதி ஊராட்சி வெண்மணி நகரில் உள்ள பயனாளியான ஜான்சிராணி அவர்களிடம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இத்திட்டத்தின் பயன் குறித்து, கேட்டறிந்தபோது , அதற்கு அவர் இதற்குமுன் ஓட்டுவீட்டில் இருந்துவந்ததாகவும், வீட்டின் மேற்பகுதி சேதமடைந்திருந்தால், மழைக்காலங்களில் வீட்டிற்குள் மழைநீர் ஒழுகியதாகவும், இதனால் எங்களுக்கு மிகவும் சிரமமாக இருந்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நானும் ஒரு பயனாளியாக தேர்வு செய்யப்பட்டு, எங்களுடைய வீடு தற்போது புதியதாக கட்டப்பட்டு வருகின்றதாகவும், புதுவீடு என்பது கனவாக இருந்த எங்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இது சாத்தியமாகி இருக்கிறது என நிறைந்த மனதுடன் நன்றி தெரிவித்தார்.
ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டத்தின் கீழ் கடந்த 20 -30 வருடங்களுக்கு முன் ஊரகப் பகுதிகளில் அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் சேதமடைந்த வீடுகளின் , மேற்கூரை, தரைத்தளம் உள்ளிட்ட பழுதுகளை நீக்கி புனரமைக்க, சிறிய அளவிலான சேதத்திற்கு ரூ.32000 முதல் பெரிய அளவிலான சேதத்திற்கு ரூ.1.50 இலட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2600 விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் பெள்ளாதி ஊராட்சி மொங்கம்பாளையம் கிராமத்தில் உள்ள பயனாளியான ஐயம்மாள் மருதப்பன் அவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இத்திட்டத்தின் கீழ் அவரது புனரமைக்க எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, வீட்டில் எந்த பகுதி புனரமைக்கப்பட்டது என்பது குறித்து கேட்டறிப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அவரது வீடு புனரமைக்க ரூ.82000 நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு, வீடு புனரமைப்பு பணி முடியும் தருவாயில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 20 சதவீதம் ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு நியாயவிலை கடைகள், சாலை வசதிகள், குடிநீர் வசதி, நீர்தேக்க தொட்டிகள், மயான வசதிகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும், அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2021-2024 வரை ஒவ்வொரு ஆண்டும் 46 ஊராட்சிகள் வீதம் மொத்தம் 185 ஊராட்சிகள் தலா ரூ.30 இலட்சம் முதல் ரூ.50 இலட்சம் வரையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் வகையில் ரூ.79.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1503 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தார்.