நாகர்கோவில் ஜூலை 31
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மேம்பாடி, சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் சிக்கி புதையுண்ட சோக சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து
தமிழக பாஜக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,:- “கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மேம்பாடி மற்றும் சூரல்மலை அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் 100க்கும் அதிகமானோர் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைமாவட்டம் என வர்ணிக்கப்படும் வயநாட்டில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும், பழங்குடி மக்களுமே அதிகம். அவர்கள் வாழ்வியல் மலையைச் சார்ந்தே உள்ளது.
இங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் 100க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். இன்னும் நூற்றுக்கணக்காணோரை மீட்க வேண்டி உள்ளது. சூரமலையில் இருந்து முண்டக்கையை இணைக்கும் பாலமும் மழையில் இழுத்துச் செல்லப்பட்டதால் மீட்புபணியில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளையும், மீட்புப்பணியை துரிதப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். உயிர் இழந்த மக்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி , இந்தத் துயர சம்பவம் குறித்து தகவல் வந்ததுமே கேரள முதல்வரிடம் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றார். அதேபோல் கேரளத்தின் இந்தத் துயர்மிகு தருணத்தில் மத்திய அரசு மீட்புப்பணி தொடங்கி ஒவ்வொன்றிலும் களத்தில் நிற்கிறது. இந்தத் தருணத்தில் வயநாடு நிலச்சரிவில் உறவுகளை இழந்துவாடும் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.